தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி


தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி
x
தினத்தந்தி 16 Aug 2018 12:00 AM GMT (Updated: 15 Aug 2018 10:26 PM GMT)

நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா கடற்கரை பகுதியில் புவனேஸ்வருக்கு தென்மேற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும்.

இந்தநிலையில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசைக்காற்று, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கி தமிழக பகுதிகள் வழியாக செல்ல உள்ளது.

எனவே அடுத்து வரும் 24 மணி நேரத்தில் இன்று மலைப்பகுதிகள் அடங்கிய நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு.

தமிழகத்தின் இதர பகுதிகளிலும் புதுச்சேரியிலும் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு சில முறை மழை பெய்யக்கூடும்.

வடக்கு ஆந்திரா கடற்கரை, வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

செங்கோட்டையில் 27 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

செங்கோட்டை 27 செ.மீ., சின்னக்கல்லார் 21 செ.மீ., பேச்சிப்பாறை 20 செ.மீ., பாபநாசம் 19 செ.மீ., வால்பாறை 16 செ.மீ., தேவலா, பெரியாறு தலா 13 செ.மீ., நடுவட்டம் 11 செ.மீ., குழித்துறை, அண்ணா பல்கலைக்கழகம் தலா 9 செ.மீ., கூடலூர் பஜார், தரமணி தலா 8 செ.மீ., பூதப்பாண்டி, நாகர்கோவில், டி.ஜி.பி.அலுவலகம்., பூந்தமல்லி, சென்னை விமானநிலையம், தாம்பரம், மைலாடி தலா 7 செ.மீ., அம்பாசமுத்திரம், சென்னை நுங்கம்பாக்கம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.

Next Story