நடிகர் குமரிமுத்துவுக்கு ஒதுக்கிய வீட்டை காலி செய்ய சொல்வதா? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


நடிகர் குமரிமுத்துவுக்கு ஒதுக்கிய வீட்டை காலி செய்ய சொல்வதா? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 16 Aug 2018 9:35 PM GMT (Updated: 16 Aug 2018 9:35 PM GMT)

கலைமாமணி விருது பெற்ற நடிகர் குமரிமுத்துவுக்கு ஒதுக்கிய வீட்டை காலி செய்ய சொல்வதா? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

சென்னை,

அதிரும் சிரிப்பொலி மூலம் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் நடிகர் குமரிமுத்து. 1979-ம் ஆண்டு ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான குமரிமுத்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்புத் திறனை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.

மேலும், 2001-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அவருக்கு சென்னை நந்தனத்தில் வீடு ஒதுக்கியது. அந்த வீட்டில் தனது மனைவியுடன் குமரிமுத்து வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அவர் இறந்து போனார். தற்போது குமரிமுத்துவின் மனைவி புண்ணியவதி மட்டும் அந்த வீட்டில் இருந்து வருகிறார்.

ஐகோர்ட்டில் மனு

இந்தநிலையில், வீட்டுக்கான ஒதுக்கீட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை புண்ணியவதிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதை எதிர்த்து அவர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘நந்தனத்தில் உள்ள வீடுகளை இடிக்கப்போவதாக கூறி வீட்டை காலி செய்யும்படி அதிகாரிகள் தொந்தரவு செய்கின்றனர். தற்போதுள்ள கட்டிடத்தை இடிக்கும் வரை நான் அங்கு வசிக்க அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் அல்லது திருமங்கலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் எனக்கு மாற்று வீடு ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

காலி செய்ய சொல்வதா?

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கலைமாமணி விருது பெற்ற நடிகர் குமரிமுத்து வசித்து வந்த வீட்டை காலி செய்யச்சொல்வதா?’ என்று அரசு வக்கீலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர், ‘சினிமா கலைஞர்களின் நடிப்புத்திறனை பாராட்டி தமிழக அரசு கவுரவிக்கிறது. அந்த பாராட்டு வெறும் காகித வடிவில் மட்டுமே நின்றுவிடாமல், கடைசி வரை அவர்களின் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டும் வகையிலும் இருக்க வேண்டும். மனுதாரருக்கு வேறு ஏதாவது ஒரு இடத்தில் வீடு ஒதுக்கீடு செய்வதற்கான சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story