வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்


வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்
x
தினத்தந்தி 18 Aug 2018 12:15 AM GMT (Updated: 17 Aug 2018 11:07 PM GMT)

காவிரி ஆற்றில் இன்று வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்வதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று (சனிக்கிழமை) அதிகாலை மேட்டூரை அடைந்து அங்கிருந்து அப்படியே திறந்துவிடப்படும். எனவே காவிரி நீர் மற்றும் பவானிசாகர், அமராவதி ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் ஆகியவையும் சேர்ந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் வரை இன்று அதிகாலை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நீர்வரும் பாதை 4 லட்சம் கனஅடி நீர் வெளியேறும் அளவுக்கு இருந்தாலும், பலவீனமான கரைகளால் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக நிவாரண முகாமுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

கொள்ளிடம் பாலத்தில் ஏற்கனவே போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது அதை வைத்து சிலர் தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள்.

திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரடியாக சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,410 பேர் வெளியேற்றப்பட்டு, 96 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அணைகள், குளங்கள், கால்வாய்களை அரசு தூர்வாரவில்லை என்று கூறுவது தவறு. நாங்கள் இதற்காக திட்டம் வகுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் காரணமாகத் தான் அணைகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடிகிறது.



கர்நாடகா நமது தேவைக்கு தண்ணீர் தரவில்லை, உபரிநீரை தான் தருகிறது. இதனால் தான் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. இருப்பினும் வருங்காலங்களில் வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகமாக கடலில் கலக்காமல், கிளை ஆறுகளுக்கு திருப்பி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரளா வலியுறுத்தி இருக்கிறது. முதல்- அமைச்சர் இதற்கு பதில் தெரிவித்துள்ளபோதிலும், அவர் சென்னை திரும்பியதும் இந்த பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story