கேரளாவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி


கேரளாவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
x
தினத்தந்தி 19 Aug 2018 11:16 AM GMT (Updated: 19 Aug 2018 11:16 AM GMT)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். #EdappadiPalanisamy

கோவை,

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து வெள்ள நீர் பவானி பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.

இதனால் வீடுகள் பல வெள்ளநீரில் மூழ்கின.  வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  சாலை முழுவதும் வெள்ளம் வழிந்தோடியது.  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.  

இந்த நிலையில், வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி இன்று அமைச்சர்களுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் சென்றனர்.

அதன் பின்னர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வேட்டி, சேலை, உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை முதல் அமைச்சர் வழங்கினார். இதனை தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.  வெள்ள நீரில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து கொண்டார்.  அவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி கூறினார். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில்,

பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். தண்ணீர் வடிந்தவுடன் பயிர் சேதம் கணக்கிடப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தரப்படும். வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை புதுப்பித்துத் தர அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காவிரியில் திறக்கப்பட்ட நீர், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கடை மடை பகுதிக்கு சென்றடையும். மழை நீர் வீணாவதை தடுக்க, தடுப்பணை கட்டுவது குறித்து குழு அறிக்கை அளித்ததும் முடிவு எடுக்கப்படும். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உணவு, உடை உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கேரளாவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

Next Story