மாநில செய்திகள்

‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு + "||" + He is the Dravidian movement MGR. Saidai Duraiasamy Talk

‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு

‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு
‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ தான் என்று ‘நாடோடி மன்னன்’ பட வைரவிழாவில் சைதை துரைசாமி பேசினார்.
சென்னை,

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பில் எம்.ஜி.ஆரின் 101-வது மனிதநேய திருவிழா, நாடோடி மன்னன் பட வைரவிழா சென்னை தியாகராயநகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நாடோடி மன்னன் பட வைரவிழா மலரை பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி வெளியிட, நடிகை லதா பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. சமரசம், எம்.ஏ.முத்து(எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு உடையலங்காரம் செய்தவர்), அமுதகானம் ஆதவன், எழுத்தாளர் மேகலா சித்ரவேல், உரிமைக்குரல் ராஜூ, பத்திரிகையாளர் துரைகருணா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் சைதை துரைசாமி பேசியதாவது:-

நாடோடி மன்னன் காவியம் தமிழக வரலாற்றில் ஒரு அரசியல் மறுமலர்ச்சியை, மக்களாட்சியின் மகத்துவத்தை ஏற்படுத்தியது. ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக வந்தது நாடோடி மன்னன் திரைப்படம்.

தமிழக வரலாறு தெரியாதவர்கள் பல செய்திகளை சொல்கிறார்கள். திராவிடம், திராவிட கொள்கை, திராவிடத்தை வளர்த்தவர் யார்? என்பதை எடுத்துக்கூறுவது என் கடமை. 1952-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் இணைந்த பிறகுதான், தி.மு.க. வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்தது.

1952-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இணையும் வரை தேர்தலில் போட்டியிடவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலின் போது எம்.ஜி.ஆர்., குறிப்பிட்ட தலைவர்களுக்காக பிரசாரம் செய்தார். அப்போது 15 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது.

தி.மு.க. என்ற கொடி பாமர மக்களிடம் சென்றடைவதற்கு காரணம், ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் தான். எம்.ஜி.ஆர். படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய போது, அந்த நிறுவனத்தின் ‘லோகோ’வில் தி.மு.க.வின் இருவர்ண கொடியை இடம்பெற செய்தார். அந்த லோகோவை வெளியிட தணிக்கைத்துறை தடைசெய்தது. அந்த தடையை எம்.ஜி.ஆர். தகர்த்து எறிந்தார்.

60 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வின் இருவர்ண கொடியை அடையாளப்படுத்தி பட்டித்தொட்டி எங்கும் எம்.ஜி.ஆர். கொடி என்று அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த இருவர்ணத்திலான 1¼ அடி துண்டை அப்போது கழுத்தில் போடுவதில் பெருமை அடைந்தோம். எம்.ஜி.ஆரின் திரைப்பட பாடலில் இருவர்ண கொடி, உதயசூரியன் பற்றி எழுதப்பட்டது.

1962-ம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1967-ம் ஆண்டில் ஆட்சி கட்டிலில் ஏறியது. 1967-ல் ஆட்சி பிடித்ததும் அண்ணாவுக்கு மாலை அணிவிக்க எல்லோரும் சென்றனர். அப்போது அண்ணா அந்த மாலையை வாங்க மறுத்துவிட்டார். இந்த வெற்றிக்கு காரணமானவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு சென்று மாலை அணிவியுங்கள் என்று அண்ணா சொன்னார்.

அண்ணாவே 1967-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு காரணமானவர் எம்.ஜி.ஆர். தான் என்று சொன்னதற்கு அடிப்படை காரணம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட கட்டுடல் போடப்பட்ட படம்தான் நாட்டு மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்று வெற்றிக்கு வித்திட்டது. பெரும்பான்மையை பெறுவதற்கு மூலக்காரணமாக எம்.ஜி.ஆர். இருந்தார்.

அண்ணா தான் எம்.ஜி.ஆரை சரியான முறையில் அடையாளம் கண்டவர். எம்.ஜி.ஆரை இதயக்கனி என்று அழைத்தார். ஒருமுறை தேர்தலுக்காக எம்.ஜி.ஆர். நிதி கொடுக்க வந்த போது, உன்னுடைய நிதி வேண்டாம், உன் முகத்தை மட்டும் காட்டு, 30 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று அண்ணா சொன்னார்.

அண்ணா பொதுக்கூட்டங்களுக்கு சென்றுவரும் நேரங்களில், அவருடைய காரில் இருக்கும் கொடியை அங்குள்ள பாமர மக்கள் பார்த்து, அண்ணாவிடம், எம்.ஜி.ஆர். கட்சியா? என்று கேட்கும் அளவுக்கு எம்.ஜி.ஆர். மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதை அண்ணா பெருமையாகவே கருதினார்.

படித்தவர்கள் மத்தியில் என் எழுத்தும், பேச்சும், கருத்தும் சென்றடைகிறது என்றால், படிக்காத பாமர மக்களிடம் என்னுடைய கருத்தை, சிந்தனையை கொண்டு சென்றவர் என்னுடைய தம்பி எம்.ஜி.ஆர். என்று அண்ணா சொல்வார். தி.மு.க. வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறவர் எம்.ஜி.ஆர். என்றும் அண்ணா சொல்வார். அவரால் திராவிட இயக்கம் வளர்ந்தது என்று அண்ணா மிகத்தெளிவாக பதிவு செய்தார்.

1971-ல் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடந்தபோது, அப்போது தேர்தல் வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பட்டித்தொட்டி எங்கும் பிரசாரம் செய்தார். இந்த ஆட்சிக்கு உத்தரவாதம் தருகிறேன், தவறு நடந்திருந்தால் அதை திருத்தியமைக்க போராடுவேன் என்று சொன்னார். என்னை நம்பி வாக்களியுங்கள் என்றும் கேட்டார். அதை தமிழக மக்கள் ஏற்றார்கள் என்பதற்கு வெளிப்பாடு, 183 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. அதன்பின்னர், தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். வெளியேறி, 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார்.

அதன்பிறகு, 1972-ம் ஆண்டு முதல் 1987 வரை எம்.ஜி.ஆரை யாராலும் வெற்றிபெற முடியவில்லை. எத்தனை சூழ்ச்சிகள், சதிகள் செய்தாலும் எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும் வரை தமிழக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தான் என்று நாட்டு மக்கள் நிரூபித்தனர். திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். தான்.

அண்ணாவை நாட்டின் முதல்-அமைச்சராக உட்காருவதற்கு காரணமாக இருந்தார். அதன்பிறகு கருணாநிதி, ஜெயலலிதாவும் ஆட்சியில் அமருவதற்கு காரணம் எம்.ஜி.ஆர். தான். இப்போது எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருப்பதற்கும் எம்.ஜி.ஆர். தான் காரணம். எம்.ஜி.ஆர். இல்லை என்றால் திராவிடம் என்ற பேச்சு தமிழகத்தில் இருந்திருக்காது.

எம்.ஜி.ஆர். நினைத்த திராவிடம் வேறு. நடைபெற்று கொண்டு இருக்கும் திராவிடம் வேறு. பாதை மாறியதால் தான் தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். வெளியேறினார். அங்கிருந்து அவர் வெளிவந்ததற்கு, மக்கள் நலன் தான் முக்கிய காரணம். எம்.ஜி.ஆர். தான் தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை, மறுமலர்ச்சியை, சிந்தனையை வித்திட்டார். எம்.ஜி.ஆர். எண்ணபடி, ‘அண்ணாயிசம்’ கொள்கைபடி ஆட்சி நடந்தால் நன்றாக இருக்கும் என்று இன்றளவும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.