மாநில செய்திகள்

ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள்வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + "||" + 62 sanctions at a cost of Rs 292 crore Visit flood damage Edappadi Palaniasamy announcement

ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள்வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள்வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
காவிரி ஆற்றில் மழை நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்க இந்த ஆண்டு ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும் என்று, வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பவானி,

காவிரி மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆறுகளின் கரையையொட்டி அமைந்துள்ள ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளது. அந்த பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பவானி தேவபுரம் பகுதியில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும் பார்த்து ஆறுதல் கூறினார்.

இதேபோல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட் வீடுகளையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

அதன்பிறகு ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ளசேதம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பவானி மற்றும் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் சுமார் 50 கிராமங்கள் ஈரோடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு உள்ளன.

மொத்தம் 67 முகாம்களில் 2,335 குடும்பங்களை சேர்ந்த 7,832 பேர் தங்கவைக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படுகின்றது. முகாமில் தங்கியிருப்பவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.

குழந்தைகளுக்கு தேவையான பால், ரொட்டி போன்ற உணவுகள், பெண்களுக்கு தேவையான சானிடரி நாப்கின்கள் கொடுக்கப்படுகின்றன. காவல்துறை பாதுகாப்பு, முழுமையாக வழங்கப்படுகின்றது. முகாமில் இருக்கின்றவர்களுக்கு ஜெனரேட்டர்கள் மூலம் மின்சார வசதி செய்யப்பட்டு இருக்கின்றது. கழிப்பிட வசதியும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

வெள்ள பாதிப்பு எவ்வளவு?

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் வெள்ளத்தால் 1,976 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதி அளவு சேதமடைந்த வீடுகள் 114 ஆகும். முழுவதும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 263 ஆகும். தண்ணீரில் மூழ்கி நீர் உட்புகுந்த வீடுகளின் எண்ணிக்கை 1599. ஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்களின் பரப்பளவு 609.69 ஹெக்டேர். வேளாண் துறை பயிர்கள் மட்டும் 205.65 ஹெக்டேர் ஆகும். தோட்டக்கலைத் துறை பயிர்கள் 404.04 ஹெக்டேர். 806 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 47 கிராமங்கள் பாதிக் கப்பட்டு இருக்கின்றன.

தற்போது பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடி ஆகும். 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1.95 லட்சம் கனஅடியாக உள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பாதிக்கப்பட்ட மக்கள் எந்தவிதமான கோரிக்கைகளை வைத்து உள்ளனர்?

பதில்:- பவானி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரமாக பொதுமக்கள் வசிக்கின்றார்கள். பவானியை பொறுத்தவரை, 2 ஆறுகளும் ஒன்றாக சேர்கின்ற பகுதி கூடுதுறை. 2 ஆறுகளின் கரையோரத்தில் இருக்கின்ற பொதுமக்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். வெள்ள காலங்களில் அவர்களுடைய வீட்டில் தண்ணீர் புகுந்து பாதிப்பிற்கு உள்ளாவதால், நிரந்தரமான வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கின்றார்கள். அவர்களுடைய கோரிக்கையை அரசு பரிசீலித்து பாதுகாப்பான இடத்திலே நிரந்தர அடுக்குமாடி குடியிருப்பு அவர்களுக்கு கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கேள்வி:- பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை ஏதும் வழங்கப்படுமா?

பதில்:- வெள்ளநீர் முழுமையாக வடிந்த பிறகு நேரடியாக கிராமங்களுக்கு சென்று, பயிர் சேதம் கணக்கிடப்பட்டு, இழப்பிற்கு தக்கவாறு பயிர் இழப்பீட்டு தொகை அரசால் வழங்கப்படும்.

கேள்வி:- வெள்ளப் பெருக்கிற்கு காரணம் ஆகாயத் தாமரை என்கிறார்களே?

பதில்:- உங்களுடைய கேள்வியிலேயே வெள்ளப்பெருக்கு என்று பதில் இருக்கின்றது. அதோடு, நான் ஈரோடு பகுதியில், பவானியில் 6-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்பு வரையும், அதற்கு மேல் பட்டப்படிப்பையும் பவானியில் தங்கிப் படித்தவன் என்ற காரணத்தினால் இந்த பகுதிகள் எந்தளவுக்கு பாதிக்கப்படும் என்று எனக்கு நன்றாக தெரியும். வெள்ளப்பெருக்கினால்தான் இப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதேயொழிய, ஆகாய தாமரையால் அல்ல. ஆகாய தாமரை முழுவதும் அகற்றப்பட்டுவிட்டது. தற்பொழுது, எதிர்பாராதவிதமாக, தென்மேற்கு பருவமழை அதிகமாக பொழிந்ததின் காரணமாக, அணையின் முழு கொள்ளளவு எட்டப்பட்டு, உபரி நீர் திறக்கப்பட்டதன் விளைவாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரை ஓரமுள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டு இருக் கின்றார்கள். அந்த மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு நான் குறிப்பிட்ட அத்தனை தேவைகளையும், உதவிகளையும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

கேள்வி:- குடிமராமத்துப் பணிகள் எந்தளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன?

பதில்:- குடிமராமத்துப் பணியை பொறுத்தவரை ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு, 1,519 ஏரிகள் முதற்கட்டமாக பரீட்சார்த்த முறையில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த காரணத்தினால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடத்தில் இருந்து மேலும் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற ஏரிகள், குளங்கள் சீரமைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை வந்தது. அந்த அடிப்படையில், மீண்டும் இந்த ஆண்டு 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக ரூ.328 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அந்த பணிகள் துவங்கப்பட்டு, அந்த பணிகளை மேற்பார்வையிடுவதற்காக 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பணிகள் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

மழைக் காலங்களில் பொழிகின்ற மழை நீர், குடிமராமத்து திட்டத்தின் காரணமாக, தூர்வாரப்பட்டதால், ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு, வரத்துக் கால்வாய் சுத்தப்படுத்தப்பட்டு, உபரிநீர் வெளியேறக்கூடிய கால்வாய் சுத்தப்படுத்தப்பட்டு, அதோடு, மதகுகள் சரிசெய்யப்பட்ட காரணத்தினாலே, நீரினை முழுவதும் சேமிக்கப்படக்கூடிய நிலையிலே வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கேள்வி:- தடுப்பணைகள் கட்டும் பணிகள் குறித்து...?
பதில்:- காவிரி நதிநீரை பொறுத்தவரை, நம்முடைய நிலப்பகுதி சமவெளி பரப்பாக இருக்கின்ற காரணத்தினாலே தடுப்பணை கட்டமுடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில், ஆதனூர் குமாரமங்களம் என்ற இடத்திலே, மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா ரூ.400 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும் என்ற அறிவிப்பை தந்து அந்த பணிகள் துவங்கப்பட்டு இருக்கின்றன. அங்கே, சில பட்டாதாரர்களிடத்திலே பேசி, ஒருமித்த கருத்து ஏற்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் விரைவாக அந்த பணிகள் துவங்கும்.

இப்படி, தமிழ்நாடு முழுவதும், பருவகாலங்களில் பொழிகின்ற மழைநீரை முழுமையாக சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்களைக் கொண்ட ஒரு குழு 3 மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டு, அந்த குழு தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து, ஆய்வறிக்கையை இன்னும் ஒரு சில மாதங்களில் அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கின்றார்கள்.

அவர்கள் சமர்ப்பித்தவுடன், தேவையான இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டு, பொழிகின்ற மழைநீர் முழுவதும் தேக்கிவைக்கப்படும். அதுமட்டுமல்ல, பொழிகின்ற மழைநீர் முழுவதும் சேமிக்கப்பட வேண்டும் என்பதற்காக 3 ஆண்டு கால திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக, இந்த ஆண்டு ரூ.292 கோடியில் 62 தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அந்த பணிகள் எல்லாம் விரைவாக துவங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னதாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் பகுதிகளில் ஆற்றங்கரையோரமாக வசிக்கின்ற குடியிருப்பு பகுதிகளில் உபரிநீர் புகுந்த காரணத்தினாலே பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், குமாரபாளையத்தில் 7 முகாம்களில் 1000 பேரும், பள்ளிப்பாளையத்தில் 8 முகாம்களில் 2,599 பேரும் தங்கவைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது நிருபர்கள் காவிரி பாசனப் பகுதிகளில் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் இன்னும் வரவில்லை என்கிறார்களே? என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் முன்பகுதியில் இருக்கின்ற விவசாயிகளுக்கு கிடைத்த பிறகுதான் கடைசியில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். இப்பொழுது மட்டுமல்ல, இது தொன்றுதொட்டு வருவது. டெல்டா பகுதியில் இருக்கின்ற விவசாய பெருங்குடி மக்களுக்கு முழுவதும் கொடுத்தாலும் 25,500 கனஅடி தண்ணீர்தான் கொடுக்க முடியும்.

அதற்குமேல் வாய்க்கால் கொள்ளளவு பிடிக்காது. ஆக, 25,500 கனஅடி அளவு தண்ணீர் திறந்து, பிரதான கால்வாய் மூலமாக தண்ணீர் திறக்கப்பட்டு, அது கிளை கால்வாய் மூலமாக திறக்கப்பட்டு, உபகால்வாய் வழியாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அங்கே வறட்சியாக இருக்கின்ற காரணத்தினாலே 25,500 கனஅடி தண்ணீரும் விவசாயிகள் நாற்று நடுவதற்காக இன்றைக்கு திறக்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் ஓரிரு தினங்களில், கடைமடைப் பகுதிகளில் இருக்கின்ற விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.