69 சதவீத இட ஒதுக்கீடு: கி.வீரமணி தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்


69 சதவீத இட ஒதுக்கீடு:  கி.வீரமணி தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 29 Aug 2018 10:07 PM GMT (Updated: 29 Aug 2018 10:07 PM GMT)

கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு திறமையான வக்கீல்களை நியமித்து வெற்றி பெற வேண்டும் என்று கி.வீரமணி தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிரானவர்களின் முயற்சியை முறியடிப்பது குறித்து விவாதிக்க திராவிடர் கழகம் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். தி.மு.க. சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் 76-ம் திருத்தம் 9-வது அட்டவணை பாதுகாப்பு பெற்று வலிமையுடன் நடைமுறையில் உள்ளது. இந்த சமூகநீதி சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் திறமை, அனுபவம், சமூகநீதியில் அக்கறை கொண்ட மூத்த வக்கீல்களை நியமித்து வாதாடி வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு விரைவாக எடுக்கவேண்டும்.

* முதுநிலை மருத்துவ கல்வி அகில இந்திய தொகுப்பு இடங்களில் 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* மேற்கண்ட கருத்துகளை மையப்படுத்தி நாடு தழுவிய அளவில் தீவிர விழிப்புணர்வு பிரசாரங்களையும், தேவையான கிளர்ச்சிகளையும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெரியார் நினைவிட வளாகத்தில் 2 இடங்களில் பனை விதைகளை விதைத்தார்.

Next Story