‘மியாட்’ மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி


‘மியாட்’ மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி
x
தினத்தந்தி 31 Aug 2018 9:27 PM GMT (Updated: 2018-09-01T02:57:53+05:30)

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு சென்று வருகிறார். கடந்த மாதம் 7-ந்தேதி அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்டார்.

பின்னர் சென்னை திரும்பிய அவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, கடந்த வாரம் கருணாநிதி சமாதிக்கு சென்று விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். அந்த வீடியோ காட்சியில் விஜயகாந்த் நடக்கவே மிகவும் சிரமப்படுவது தெரிந்தது.

மருத்துவமனையில் அனுமதி

அதனைத்தொடர்ந்து வீட்டிலேயே விஜயகாந்த் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள ‘மியாட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவியது. அதனைத்தொடர்ந்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று நள்ளிரவில் தெரிவித்தது.

Next Story