லோக் ஆயுக்தா அமைப்பை இன்னும் ஏற்படுத்தாதது ஏன்? தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி
லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு 50 நாட்களுக்கு மேல் ஆகியும், தமிழகத்தில் இன்னும் ஏற்படுத்தாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊழலை ஒழிப்பதற்கான லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், அச்சட்டத்தின்படி லோக் ஆயுக்தா அமைப்பை தமிழக அரசு இன்னும் ஏற்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.
லோக் ஆயுக்தா சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 9-ந் தேதியே நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், உரிய அனுமதிகள் பெறப்பட்டு லோக் ஆயுக்தா சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். அதனடிப்படையில் லோக் ஆயுக்தா தேர்வுக்குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அக்குழுவின் கூட்டத்தை உரிய முன் அவகாசத்தில் கூட்டி, லோக் ஆயுக்தாவை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
இந்த பணிகள் அனைத்தையும் ஜூலை மாதம் 10-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டிருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டை ஏமாற்றும் வகையில், கெடு முடிவதற்கு ஒரு நாள் முன்பாக லோக் ஆயுக்தா சட்டத்தை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியது. இதனால் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான கெடுவை செப்டம்பர் 10-ந் தேதி வரை நீதிபதிகள் நீட்டித்தனர்.
நீட்டிக்கப்பட்ட கெடு முடிவதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றியதைத் தவிர அ.தி.மு.க. அரசு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. சுப்ரீம் கோர்ட்டு பலமுறை எச்சரித்தும், கண்டித்தும்கூட லோக் ஆயுக்தாவை அமைக்க அரசு முன்வரவில்லை என்றால், அந்த அமைப்புக்கு தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு அஞ்சுகின்றனர் என்பதை அறியலாம்.
லோக் ஆயுக்தாவை அமைப்பதற்குத் தவறியதற்காக வரும் செப்டம்பர் 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தால் கூட, அதை அ.தி.மு.க. அரசு துடைத்துக் கொள்ளுமேதவிர லோக் ஆயுக்தா அமைத்து மாட்டிக்கொள்ளாது. அதே நேரத்தில் ஊழலில் திளைக்கும் இந்த அரசு வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. அதன் பின்னர் அமையும் புதிய அரசில் வலிமையான, சிறப்பான லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story