நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க சமத்துவ மக்கள் கட்சியில் 27 வேட்பாளர்கள் தேர்வு சரத்குமார் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக சமத்துவ மக்கள் கட்சியில் 27 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என சரத்குமார் கூறி உள்ளார்.
சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 12-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் தலைமை தாங்கி கட்சி கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
விழாவில் மாநில துணை பொதுச்செயலாளர் எம்.ஏ.சேவியர், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், தலைமை நிலைய செயலாளர் பாகீரதி, மாநில வர்த்தகர் அணி துணைச்செயலாளர் என்.ஆர்.பி.ஆதித்தன், கலை இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் கிச்சா ரமேஷ், முருகேச பாண்டியன், முருகேசன், மாவட்ட அவைத்தலைவர் டிக்ஷன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொடியேற்று நிகழ்ச்சி முடிந்ததும் ஆர்.சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்யும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. கட்சி நிர்வாகிகளின் ஆர்வம், அவர்களின் பயணம் மற்றும் செயல்பாடுகளை மையமாக வைத்து 27 வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
முதலில் 2 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜனதா பிறகு நாட்டை ஆண்டுகொண்டு இருக்கிறது. அதே போன்று ஏற்கனவே 2 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற நாங்கள் அடுத்து நாட்டை ஆளும் சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே தேர்தலை சந்திக்கிறோம்.
சாதி, மத அமைப்பினர்களுக்கு இடம் இல்லை என்று ரஜினிகாந்த் விதிமுறைகளை வெளியிட்டு இருப்பதன் மூலம் எங்கள் கொள்கையை பின்பற்றுகிறார் என்று நினைக்கிறேன். சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு ஒரு இயக்கம் இருக்க வேண்டும் என்பது தான் சமத்துவ மக்கள் கட்சி. சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு சமத்துவம் இருந்தால் தான் நாடு சிறப்பாக இருக்கும். அது ஒரு சமத்துவ கொள்கை தான். அது எங்கள் கட்சி கொள்கைக்கு இணையாக உள்ளதாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story