குட்கா வழக்கில் தொழில் அதிபர் மாதவராவ் குடோனுக்கு ‘சீல்’ சி.பி.ஐ. நடவடிக்கை
செங்குன்றம் அருகே குட்கா வழக்கில் தொழில் அதிபர் மாதவராவ் குடோனுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
செங்குன்றம்,
குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி சென்னையில் குட்கா போதை பொருட்கள் கிடைத்து வந்தன. 2016-ம் ஆண்டு செங்குன்றத்தை அடுத்த சோத்துப்பாக்கம் தீர்த்தங்கரையாம்பட்டு, பாலவாயல் ஆகிய பகுதிகளில் தொழில் அதிபர் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா குடோன்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அவர்களுக்கு ரகசிய டைரி ஒன்று கிடைத்தது. அதில் 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை குட்கா விற்பனை செய்ய போலீஸ் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் யார், யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் இருந்தது.
அந்த பட்டியலில் இடம்பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது. இதையடுத்து இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் குட்கா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என கோரி இருந்தனர். அதனை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
தற்போது சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்துவரும் நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து தொழில் அதிபர் மாதவராவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, குட்கா ஊழல் வழக்கில் யார், யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? என்ற விவரத்தை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் மாதவராவ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் துல்லியமாக விசாரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங்கரையாம்பட்டில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாதவராவின் குடோனுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கில் தீவிரமாக விசாரித்து வருவதால், லஞ்சம் பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் கலக்கத்தில் இருந்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story