அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு கூறி தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மீதான லஞ்ச ஊழல் புகார் நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கு, வருமான வரித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னை,
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் வீடு, நிறுவனம் போன்ற இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. இதில் பல ஆவணங்களை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பற்றி தமிழக அரசுக்கு வருமான வரித்துறை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வாக்குமூலத்தில் ஒப்புதல்
அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியிடம் வருமான வரித்துறை 7.4.2017 வாக்குமூலம் பெற்றது. அதில் அவர், வேலை வாங்கித்தருவதற்காக பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் (தலா ரூ.12.96 லட்சம்) பெறப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது வாக்குமூலத்தில் கூறும்போது, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்தார். டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீதான வருமான வரித்துறை வழக்கு தொடர்பாக அவரது நேர்முக உதவியாளர் ஜெ.சீனிவாசன் வீட்டில் (சென்னை, வளசரவாக்கம்) சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இ-மெயிலில் வந்த ஆவணம்
அப்போது அவரது இ-மெயிலில் இருந்து இரண்டு முக்கிய ஆவணங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் யாரிடம் இருந்து எந்த தேதியில் எவ்வளவு தொகை பெறப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டு இருந்தது. சில விண்ணப்பங்களும் கிடைத்தன.
அதில் காணப்பட்ட தொகைகளை டாக்டர் சி.விஜயபாஸ்கரின் தனிப்பட்ட உதவியாளர்கள், சுகாதார நலத்துறைக்கு தொடர்புடையவர்கள் மூலம் வசூலித்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.
5 மாத காலகட்டத்தில் மட்டும் ரூ.20 கோடியே 75 லட்சத்து 91 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டுள்ளது.
கவரில் பணம்
மேலும், வருமான வரி வழக்கு தொடர்பாக 7.4.2017 அன்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில், இழுப்பூரில் உள்ள அவரது வீட்டில் ரூ.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில் ரூ.12 லட்சத்து 96 ஆயிரம் தனித்தனி கவர்களில் போடப்பட்டு இருந்தன. அந்த கவர்கள் மீது, சத்துணவு திட்டத்தின் வேலைக்காக என்று எழுதப்பட்டு இருந்தது.
இது தமிழக அரசின் தகவலுக்காகவும், தகுந்த நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது. இந்த அறிக்கையின் நகல், சுரங்கங்கள் மற்றும் கனிமத்துறை கமிஷனர், தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையச் செயலாளர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதம், அரசு வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. இந்த கடித ரகசியத்தை யார் மூலம் யார் கசியவிட்டது என்பது பற்றி உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நடவடிக்கை
இதுதொடர்பான தகவல்கள் அரசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது. தற்போது எதுவும் அனுப்பப்படவில்லை. இது குறித்து தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம். தவறும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story