அரசு நிலங்களை பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை ஐகோர்ட்டு உத்தரவு
ஆக்கிரமிப்புக்கு உடந்தை யாக இருந்து அரசு நிலங்களை பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
திருவண்ணாமலையில் அரசு சார்பில் தனக்கு ஒதுக்கப்பட்ட 2 ஆயிரம் சதுர அடி நிலத்தை போயர் சங்கத்தின் தலைவர் சண்முகம் என்பவர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறி ராஜேஷ் என்பவர் திருவண்ணாமலை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு நிலையில் இருக்கும் போது, ராஜேசுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தனக்கு சொந்தமானது என்று கூறி சண்முகம் தாசில்தாரிடம் மனு அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக ராஜேசுக்கு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி ராஜேஷ், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘குறிப்பிட்ட அந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தால் அதை மீட்டு, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று திருவண்ணாமலை கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
மேலும், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களை பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீதும், ஆக்கிரமிப்புகளுக்கு உடந்தையாக இருந்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் கலெக்டர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிலங்களும் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதையும் கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story