பயங்கரவாதிகளுக்கு அரசியல் கட்சியினர் துணைபோக வேண்டாம் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்


பயங்கரவாதிகளுக்கு அரசியல் கட்சியினர் துணைபோக வேண்டாம் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Sep 2018 10:00 PM GMT (Updated: 2018-09-02T03:04:35+05:30)

பயங்கரவாதிகளுக்கு துணை போகின்ற எந்தவொரு நடவடிக்கையிலும் அரசியல் கட்சியினர் ஈடுபடவேண்டாம் என பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

ஆலந்தூர்,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. இதற்காகவும், நாட்டில் உள்ள பொருளாதார ரீதியான தவறுகளை சரி செய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி துணிச்சலாக எடுத்தார். இதனால் பொருளாதார வளர்ச்சி உச்சத்தை எட்டக்கூடிய நிலைக்கு சென்றுவிட்டது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்ந்து உள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு கடைசி காலாண்டில் 7.7 சதவீதமாக இருந்தது. இது பிரதமர் மோடி அரசின் சாதனையாக உள்ளது. இது ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்தின் நிலையாகும்.

விவசாயம் சார்ந்த நிலையில் 3 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதமாக உயர்ந்து உள்ளது. தொழில் முன்னேற்றம் சென்ற ஆண்டு மைனஸ் 1.8 சதவீதமாக இருந்த நிலை மாறி, தற்போது 13.5 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.

உலகில் எந்த நாட்டிலும் நடக்காத மிகப்பெரிய தொழில் புரட்சியை பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கையால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பெற்று இருக்கிறோம்.

தொழில் சம்பந்தமான வாகன வளர்ச்சியில் கடந்த ஆண்டு மைனஸ் 9.5 சதவீதமாக இருந்த நிலை மாறி, 51.6 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்த வளர்ச்சி மேலும் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.

மாவோயிஸ்டு இயக்கங்களை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டபோது, அவர்களிடம் இருந்து கைப்பற்றிய கடிதத்தில் பிரதமர் மோடியை கொலை செய்ய சதிதிட்டங்கள் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜீவ்காந்தியை கொன்ற அதே வழிமுறையில் மோடியை கொலை செய்ய முயற்சி செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

அவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டபோது ராகுல்காந்தி உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது மராட்டிய மாநில உயர் போலீஸ் அதிகாரி மாவோயிஸ்டுகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங் களை காண்பித்து உள்ளார்.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அவசரப்பட்டு தந்த அறிக்கைகள் பயங்கரவாதிகளுக்கு துணையாக போகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். ராஜீவ்காந்தியை கொன்றது போன்ற மற்றொரு சம்பவம் நடக்க வேண்டுமா?. அதற்கு இவர்கள் துணை போவார்களா?.

அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், பயங்கரவாதிகளுக்கு துணைபோகின்ற எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்கள் எதற்காக அங்கு செல்கிறார்கள். தொழில் இல்லாமல் அங்கு செல்கிறார்களா?. அதற்கு மாற்று வழி என்ன?, இந்த சம்பவத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து தமிழக அரசு விசாரிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story