அ.தி.மு.க.வை யாராலும் தொட்டுப்பார்க்க முடியாது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தொண்டர்கள், பொதுமக்களின் ஆதரவு இருக்கும் வரை அ.தி.மு.க.வை யாராலும் தொட்டுப்பார்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம்,
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே அனுப்பூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.20 லட்சத்தில் அம்மா பூங்கா மற்றும் ரூ.10 லட்சத்தில் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்துவைத்தார்.
உடற்பயிற்சி
பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்த வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தார். உடற்பயிற்சி உபகரணங்கள் அனைத்தும் வசதியாக உள்ளதா? என்று அங்கிருந்த இளைஞர்களிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து புதிய பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இறகுப்பந்து திடலில் சிறிது நேரம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறகுப்பந்து விளையாடினார்.
இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
விவசாயம்
கிராமங்களில் உள்ள இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு விளையாட்டில் மேம்பாடு அடையமுடியும். இதை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் ஏழை, எளியவர்கள் பயன்பெறும் வகையில் கிராமங்களில் அரசு சார்பில் உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காக்கள் திறக்கப்பட்டு வருகிறது.
கிராமப்புற மக்கள் முன்னேற்றம் பெற்று, அவர்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதே அரசின் லட்சியம். நகர்ப்புற மக்களுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் ஊரகப்பகுதி மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
இதை அடிப்படையாக கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம். நான் கிராமத்தில் பிறந்த விவசாயி. இதனால் விவசாயிகள் படும் சிரமம் நன்றாக தெரியும். விவசாயிகளின் நிலை மேம்பட அரசு உறுதுணையாக இருக் கும். மாநிலம் முழுவதும் விவசாயம் செழிக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. கிராமப்புற மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை வகுத்து நிறைவேற்றி வருகிறோம்.
விவசாயமும், கல்வியும் இரு கண்கள் போன்றது. எனவே, விவசாயத்தை போலவே கல்விக்கும் முன்னுரிமை கொடுத்து வருகிறோம். வேளாண்மைதுறை மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்தை குறிக்கோளாக கொண்டு பாடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மலை கிராமம்
இதைத்தொடர்ந்து கருமந்துறையில் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்றார். அப்போது, வழி நெடுகிலும் அவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கருமந்துறை செல்லும் வழியில், அருணா என்ற மலை கிராமத்தில் வசித்து வரும் தீர்த்தன் என்பவரின் வீட்டிற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சென்றார். அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து, அக்குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களின் வாழ்வாதாரம் குறித்து அவர் கேட்டறிந்தார். இந்த மலைப் பகுதியில் என்னென்ன தானியங்கள் விளைகிறது, விளைவிக்கப்பட்ட தானியங்களை எப்படி விற்பனை செய்கிறார்கள் என்று அவர்களிடம் கனிவோடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.
இதையடுத்து வாழப்பாடி அருகே பேளூரில் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து பேளூரில் கட்சியினர் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ஆட்சி மீது அவதூறு
தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. அரசு மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுகிற அரசு. ஆனால் எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் வேண்டும் என்றே இந்த ஆட்சி மீது அவதூறு பரப்பி வருகின்றனர். மத்தியில் யார் ஆட்சி அமைகிறதோ? அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தனது குடும்பத்தினர் மட்டும் பயன்பெறுகிற வகையில் அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி கட்சி தான் தி.மு.க.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது காங்கிரசுடனும், அதன்பிறகு பா.ஜ.க.வுடனும் கூட்டணி அமைத்து கருணாநிதி எத்தனை முறை ஆட்சிக்கு வந்துள்ளார். ஆனால் அவர் தமிழ்நாட்டுக்காக என்ன செய்தார்? என்று நினைத்து பாருங்கள். இப்போது பா.ஜ.க. மதவாத கட்சி என்கிறார் மு.க.ஸ்டாலின். கூட்டணி அமைத்து 5 ஆண்டுகள் ஆட்சி அமைத்தபோது, பா.ஜ.க. கொள்கைகள் பிடித்து தானே ஆட்சி அமைத்தீர்கள். அப்போது தெரியவில்லையா பா.ஜ.க. மதவாத கட்சி என்று.
கவிழ்க்க முடியாது
அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சராக ஆகலாம் என்பதற்கு நானே ஒரு முன்உதாரணம். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை உடைக்கவும், இந்த ஆட்சியை கவிழ்க்கவும் சிலர் திட்டமிட்டனர். ஆனால் தொண்டர்கள், பொதுமக்களின் ஆதரவு இருக்கும் வரை அ.தி.மு.க.வை யாராலும் தொட்டுப்பார்க்க முடியாது. ஆட்சியை கவிழ்க்க முடியாது. ஏனென்றால் இது தொண்டர்கள் வழிநடத்துகிற கட்சி.
தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஏதாவது திட்டம் கொண்டு வந்தார்களா? காவிரி பிரச்சினையை தீர்த்தார்களா? முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினை என்று எதையுமே செய்யவில்லை. இவை அனைத்திற்கும் குரல் கொடுத்தது அ.தி.மு.க. அரசு தான். இன்றைக்கு தமிழ்நாட்டிலே ஒரு செழிப்பான ஆட்சி நடப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். எந்த நேரத்தில் தேர்தல் அறிவித்தாலும் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படுகிற வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Related Tags :
Next Story