சேலத்தில் இரு பஸ்கள் மோதல்: தாத்தா, பாட்டி, பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தை


சேலத்தில் இரு பஸ்கள் மோதல்: தாத்தா, பாட்டி, பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தை
x
தினத்தந்தி 1 Sep 2018 10:32 PM GMT (Updated: 2018-09-02T04:02:40+05:30)

சேலத்தில் பஸ்கள் மோதியதில் 7 பேர் இறந்தனர். இதில் தாத்தா, பாட்டி, பெற்றோரை இழந்து 3 வயது ஆண் குழந்தை மட்டும் உயிர்தப்பியது.

சேலம், 

சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை தனசேகர் (வயது 43) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது.

அப்போது சாலையோரம் பஞ்சராகி நின்றுகொண்டிருந்த ஒரு சரக்குவேன் மீது எதிர்பாராதவிதமாக அந்த பஸ் பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு மறுபுறம் உள்ள சாலைக்கு சென்றது. அப்போது பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு ஒரு ஆம்னி பஸ் வந்துகொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ஆம்னி பஸ், எதிரில் வந்த தனியார் பஸ் மீது அதிவேகமாக மோதியது.

விபத்தில் தனியார் பஸ்சின் முன்பக்கம் அப்பளம்போல நொறுங்கியது. ஆம்னி பஸ் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பஸ்சின் இருக்கைகள் கழன்று வெளியே விழுந்தன, கண்ணாடிகள் நொறுங்கின. சரக்கு வேனும் உருக்குலைந்தது. நள்ளிரவு 2 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பஸ்களிலும் இருந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் சேலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட னர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்கள் உடல் கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுதொடர்பாக சூரமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் பெயர் விவரம் தெரியவந்தது.

ஆம்னி பஸ்சில் பயணம் செய்த கேரள மாநிலம் ஜரிகம்பள்ளியை சேர்ந்த ஜிம் ஜேக்கப் (58), புதுமாப்பிள்ளையான ஆலப்புழையை சேர்ந்த ஷானுதரியன் (28), திருச்சூரை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் (66), அவருடைய மனைவி அல்போன்சா (61), இவர்களின் மகள் டினு ஜோசப் (32), அவருடைய கணவர் சிஜி வின்சென்ட் (35), கேரள மாநிலம் பத்தினம் திட்ட பகுதியை சேர்ந்தவரான ஆம்னி பஸ் மாற்று டிரைவர் ஜான் (40) ஆகியோர் இறந்தது தெரியவந்தது.

விபத்தில் பலியானவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்தவர்கள் எனவும், ஊருக்கு திரும்பியபோது விபத்தில் சிக்கியதும் தெரிந்தது. பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 3 வயது குழந்தை ஈதனின், பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகிய 4 பேரும் பலியானார்கள். அதிர்ஷ்டவசமாக ஈதன் மட்டும் உயிர்தப்பினான். அவன் தனது தாயின் உடல் அருகே நின்று ‘அம்மா, அம்மா’ என்று கூறி அழுதான். இதை வைத்து அந்த பெண் தான் அவனது தாய் என்பதை போலீசார் அறிந்தனர்.

அந்த சிறுவனை ஒரு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து கேரளாவில் இருந்து வந்த டினு ஜோசப்பின் தங்கை தானு அன் ஜோசப்பிடம் போலீசார் ஈதனை ஒப்படைத்தனர்.

விபத்தில் இறந்த ஷானுதரியனுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. அவருடைய மனைவி லேசான காயங்களுடன் உயிர்தப்பி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினார். டாக்டர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.

Next Story