நடிகர் சிம்பு வீட்டு பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் ஐகோர்ட்டு எச்சரிக்கை
நடிகர் சிம்பு வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து அரசன் என்ற தலைப்பில் பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரிக்க திட்டமிட்டது.
இந்தப் படத்திற்காக நடிகர் சிம்புவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 50 லட்சம் ரூபாய் முன் பணமாக படத்தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது.
ஆனால், படத்தில் நடிக்காத காரணத்தால் முன்பணத்தை திரும்ப வசூலிக்கும் வகையில் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
ஜப்தி செய்ய நேரிடும்
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறித்த காலத்தில் படப்பிடிப்பு பணிகளை தொடங்காததால் பெருத்த இழப்பு ஏற்பட்டதாக நடிகர் சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, தனக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரத்தை நடிகர் சிம்பு தாக்கல் செய்யவில்லை என்று கூறி, முன்பணமாகப் பெற்ற 50 லட்சம் ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று நடிகர் சிம்புவுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அந்த உத்தரவில், ‘4 வாரங்களில் இந்த உத்தரவாதத்தை வழங்காவிட்டால் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல், பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்க நேரிடும்’ என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story