தமிழகத்தை சாராத அதிகாரி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
பெண் போலீஸ் அதிகாரி பாலியல் புகார் தொடர்பாக, தமிழகத்தை சாராத அதிகாரி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குனர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அதே துறையில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த பெண் அதிகாரி ஒருவர் புகார் கொடுத்து ஒரு மாதம் ஆகப்போகிறது. அதுபற்றி ஒரு வழக்கு கூட பதிய முன்வராத எடப்பாடி பழனிசாமியின் அரசு, அந்தப் பெண் அதிகாரியை மட்டும் இடமாற்றம் செய்து, புகாருக்கு உள்ளானவரை அதே இடத்தில் தொடர்ந்து பணிபுரிய அனுமதித்தது.
இப்படிச்செய்வதால் புகாருக்கு உள்ளானவர் தனக்கு எதிரான ஆதாரங்களை அழிக்க வாய்ப்பளிக்கும் என்பதை எடுத்துச்சொல்லி, அவரையும் இடமாற்றம் செய்ய நான் ஏற்கனவே வலியுறுத்தினேன்.
இந்த நிலையில், ஆகஸ்டு 30-ந்தேதி, கூடுதல் டி.ஜி.பி., சீமா அகர்வால் தலைமையில் கூடிய விசாகா கமிட்டி, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி அளித்துள்ள ஆதாரங்களைப் பரிசீலித்து, அதில் போதிய முகாந்திரம் இருந்த காரணத்தால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றியும், ஐ.ஜி., மீது கிரிமினல் வழக்குப் பதிந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருக்கிறார். இதற்குப் பிறகும் ஐ.ஜி. இடமாற்றம் கூட செய்யாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
குற்றம் சாட்டப்பட்டவர் லஞ்ச ஒழிப்பு பிரிவில் தொடர்ந்து பணிபுரியும் நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் நியாயமான விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படியே அவர்கள் நியாயமாக நடந்துகொள்ள நினைத்தாலும், அவரை காப்பாற்ற முயலும் தமிழக முதல்-அமைச்சரின் நிர்வாகத்தின் கீழ்தான் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் வருகிறார்கள் என்பதால் அவர்களை நியாயமாக செயல்பட விடமாட்டார்கள். எனவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி, தமிழகத்தை சாராத ஓர் அதிகாரியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story