அர்ஜூன்சம்பத் உள்ளிட்ட இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி 5 பேர் கைது


அர்ஜூன்சம்பத் உள்ளிட்ட இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி 5 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sep 2018 10:45 PM GMT (Updated: 2018-09-03T04:20:45+05:30)

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் உள்ளிட்ட இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கோவையில் சென்னை வாலிபர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் 2016-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முபாரக், சதாம் உசேன், சுபேர், அபுதாகீர் ஆகிய 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலையை தொடர்ந்து கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் உள்ளிட்ட இந்து இயக்க நிர்வாகிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களது வீடுகளிலும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவையில் இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் சதித்திட்டத்துடன் சிலர் சென்னையில் இருந்து கோவைக்கு ரெயிலில் வருவதாக மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அந்த ரெயிலில் பயணம் செய்த சென்னை வியாசர்பாடி, புதுநகரை சேர்ந்த ஜாபர் சாதிக்அலி (வயது 29), ஓட்டேரியை சேர்ந்த சலாவுதீன் (25), பல்லாவரத்தை சேர்ந்த சம்சுதீன் (25), திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில் (25) ஆகிய 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களை ரெயில் நிலையத்தில் இருந்து அழைத்துச்செல்வதற்காக வந்திருந்த கோவையை சேர்ந்த ஆசிக் (25) என்பவரும் பிடிபட்டார்.

அவர்கள் 5 பேரையும் போலீசார் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் சென்னையில் இருந்து வந்த மத்திய புலனாய்வு பிரிவு, சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் கோவை போலீஸ் அதிகாரிகள் விடிய, விடிய விசாரணை நடத்தினார்கள். அப்போது, கோவை போத்தனூரில் நடைபெற்ற ஒரு கைதியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து வந்ததாக பிடிபட்டவர்கள் கூறினார்கள்.

மேலும் கோவையில் வசித்துவரும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத், இந்து முன்னணி பேச்சாளர் மூகாம்பிகை மணி, சக்திசேனா நிறுவனர் அன்புமாரி உள்ளிட்ட இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் சதித்திட்டத்துடன் வந்ததாகவும் திடுக்கிடும் தகவலை கூறினார்கள்.

சென்னையில் இருந்து வந்த 4 வாலிபர்களும், கோவையை சேர்ந்த ஆசிக்குடன் முகநூல் மூலம் நண்பர்களாக அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள், இந்து இயக்க பிரமுகர்களின் முகநூலையும் பார்த்து அடிக்கடி எதிர் கருத்துகளை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆசிக் உதவியுடன், இந்து இயக்க பிரமுகர்களின் முகவரியை அறிந்து சதி திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்து அதற்காக கோவை வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 5 பேர் மீதும் கோவை வெறைட்டிஹால் ரோடு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உபா (யு.ஏ.பி.ஏ.) சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுவது, மத கலவரத்தை தூண்டும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது, கூட்டுசதி, சட்டவிரோதமாக கூடி சதி ஆலோசனை நடத்துவது உள்ளிட்ட 7 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று மாலை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக அவர்கள் 5 பேரிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 5 வாலிபர்கள் கைதானதை தொடர்ந்து அர்ஜூன் சம்பத் உள்பட இந்து இயக்க பிரமுகர்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அர்ஜூன்சம்பத் கூறும்போது, “பாரதீய ஜனதா, ரஜினி உள்ளிட்ட ஆன்மிக அரசியலை முன்னிலைப்படுத்துபவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இது சில அமைப்பினருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் எனது யாத்திரைக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். புதிய செல்போன் எண்களில் இருந்து எனக்கு கொலை மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தது. மிரட்டல்களை பற்றி நான் கவலைப்படவில்லை” என்றார்.

Next Story