தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகார் - பாஜகவை விமர்சித்த பெண்ணுக்கு 15 நாள் காவல்


தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகார் - பாஜகவை விமர்சித்த பெண்ணுக்கு 15 நாள் காவல்
x
தினத்தந்தி 3 Sept 2018 10:53 PM IST (Updated: 3 Sept 2018 10:53 PM IST)
t-max-icont-min-icon

தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகாரின் பேரில் பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்த பெண்ணுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. #TamilisaiSoundararajan

நெல்லை,

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட இளம் பெண் ஒருவருடன் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் விமானம் தரையிறங்கியதும் கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார்.

விசாரணையில், கோஷமிட்டதாக சொல்லப்படும் அந்த இளம் பெண், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா என்பதும், தற்போது அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அவர் விமானம் ஏறிய போது இந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகாரை அடுத்து சோபியா கைது செய்யப்பட்டார். பின்னர், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர், சோபியா தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் முழக்கமிட்ட குற்றச்சாட்டில் சோபியாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, சோபியா நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்


Next Story