சென்னையில் காணாமல்போன ஏ.சி. பஸ்கள் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாக அதிகாரி தகவல்


சென்னையில் காணாமல்போன ஏ.சி. பஸ்கள் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாக அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 3 Sep 2018 11:45 PM GMT (Updated: 3 Sep 2018 11:26 PM GMT)

சென்னையில் மாநகர ஏ.சி. பஸ்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது 5 ஏ.சி. பஸ்களே இயக்கப்படுகின்றன.

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மிக முக்கிய கோட்டமான சென்னையில் அடையாறு, சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, வடபழனி, சென்டிரல், அண்ணாநகர், தண்டையார்பேட்டை, மாதவரம் மண்டலங்கள் உள்ளடங்கிய 32 பஸ் பணிமனைகள் உள்ளன.

தினந்தோறும் 1,488 சாதாரண பஸ்கள், 777 எக்ஸ்பிரஸ் பஸ்கள், 1,131 டீலக்ஸ் பஸ்கள், 92 வால்வோ ஏ.சி. பஸ்கள், 200 சிற்றுந்துகள் என 3 ஆயிரத்து 688 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த பஸ்கள் மூலம் சென்னையில் சராசரியாக ஒரு நாளில் 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், கூட்ட நெரிசலில் சிரமம் இல்லாமல் பயணிப்பதற்கு ஏதுவாகவும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் வால்வோ ஏ.சி. பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

வெள்ளை, பச்சை, நீலம் என்ற நிறங்களின் அடிப்படையில் பஸ்களின் தடம் எண்ணை பார்த்த கண்களுக்கு, டிஜிட்டல் போர்டுடன் அறிமுகமான இந்த ஏ.சி. பஸ்கள் பயணிகளை வெகுவாக ஈர்த்தது. வெளிநாட்டு பஸ் போன்ற தோற்றத்தை கொண்ட இந்த ஏ.சி. பஸ்கள் பயணிகள் மத்தியில் கடும் வரவேற்பை பெற்றது. இந்த வகை பஸ்கள் கேளம்பாக்கம், தண்டலம், வடபழனி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும், வேலூர், புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கும் இயக்கப்பட்டன.

ஆனால் உரிய பராமரிப்பு பணி இல்லாத காரணத்தால் ஏ.சி. பஸ்களின் பொலிவு குறைய தொடங்கியது. அதேவேளை போக்குவரத்து கழகத்தின் பஸ்கள் குறைப்பு நடவடிக்கையில், ஒருங்கிணைந்த கால அட்டவணையில் இயக்கப்படாத ஏ.சி. பஸ்களும் இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு வழித்தடமாக மாநகர ஏ.சி. பஸ்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு தொடக்கத்தில் 92 என இருந்த வால்வோ ஏ.சி. பஸ்களின் எண்ணிக்கை, அடுத்த 6 மாதங்களில் 60 ஆக குறைக்கப்பட்டன. தற்போது ஏ.சி. பஸ்களை பார்ப்பதே அரிது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சென்னை கோயம்பேட்டில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி (தடம் எண்: 570) ஒரு சில பஸ்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் வசதிக்காக கொண்டு வரப்பட்ட நல்ல திட்டத்தை உரிய நடவடிக்கையின்மை காரணமாக போக்குவரத்து கழகமும், அரசும் கெடுத்துவிட்டன என போக்குவரத்து தொழிற்சங்கம் குற்றம் சாட்டியிருக்கிறது.

இதுகுறித்து தொ.மு.ச. தொழிற்சங்கத்தின் பொருளாளர் கி.நடராஜன் கூறியதாவது:-

சென்னை மாநகரில் பயணிகளை வெயில் கொடுமையில் இருந்து பாதுகாக்கும் வகையில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.சி. பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த பஸ்களை முறையாக பராமரிக்க போக்கு வரத்து கழகம் தவறிவிட்டன. ஒரு பஸ்சின் ஆயுட்காலம் என்பது 7 ஆண்டுகள் அல்லது 6 லட்சம் கி.மீ. தூர பயண நிலை ஆகும். ஆனால் குறிப்பிட்ட தூர பயண நிலையை அடையும் முன்பே இந்த ஏ.சி. பஸ்கள் தனது தரத்தை இழந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பஸ்களுக்கான தரமற்ற உதிரி பாகங்களை பயன்படுத்தியது தான்.

அந்தவகையில் ஏ.சி. பஸ்சின் ஆயுட்காலத்தை முன்கூட்டியே சீரழித்து விட்டனர், போக்குவரத்து கழகத்தினர். நாட்டின் பிற சிறிய மாநிலங்கள் கூட ஏ.சி. பஸ்களை முறையாக இயக்கி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஏ.சி. பஸ்கள் இயக்கத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து கழகமும், முறைப்படுத்த அரசும் தவறிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாநகரில் இயக்கப்பட்டு வந்த ஏ.சி. பஸ்களின் ஆயுட்காலம் முடிந்துவிட்டன. எனவே இந்த பஸ்களின் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. புதிய பஸ்கள் வாங்கப்படாததால் சேவை நிறுத்தப்பட்ட ஏ.சி. பஸ்களுக்கு பதிலாக, அந்த வழித்தடங்களில் டீலக்ஸ் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சேவை நிறுத்தப்பட்ட அந்த பஸ்கள் இதர பயன் பாட்டுக்காக ‘ஆன்-லைன்’ மூலம் ஏலம் விடப்பட உள்ளன. அந்த பஸ்களின் உதிரி பாகங்கள் பழுதுபார்க்கும் பணி எதுவும் நடைபெறவில்லை. எனவே அந்த பஸ்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வராது”, என்றார்.

Next Story