தமிழகத்தில் 21.1 சதவிகித புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும் ஆண்கள்-ஆய்வில் தகவல்


தமிழகத்தில் 21.1 சதவிகித  புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும் ஆண்கள்-ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 4 Sept 2018 3:40 PM IST (Updated: 4 Sept 2018 3:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 21.1 சதவிகித ஆண்கள் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

சென்னை

சென்னை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவை இணைந்து க்ளோபல் அடல்ட் டொபாக்கோ சர்வே (Global Adult Tobacco Survey) எனப்படும், புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவோர் குறித்த ஆய்வை மேற்கொண்டது.

 நாடு முழுவதும் 2009 முதல் ஆண்டுதோறும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில், 2016 அக்டோபர், நவம்பரில் 1371 ஆண்கள் மற்றும் 1544 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், தமிழகத்தில், 2009 - 10 ஆம் ஆண்டு புகையிலை பயன்படுத்துவோர் 16 புள்ளி 6 சதவிகிதமாக இருந்தது. இந்த விகிதம் அதிகரித்து 2016-17 கணக்கெடுப்பின்படி, 20 சதவிகிதமாக இருக்கிறது.
 
கடந்த 8 ஆண்டுகளில் புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவோர் விகிதம் தமிழகத்தில் 3.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எண்ணிக்கை 2009-10 ல் 9.6 சதவிகிதமாகவும், 2016-17ல் 10.5 சதவிகிதமாக உள்ளது. புகையற்ற புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை பொருத்தவரை 2009-10ல் 8.1 சதவிகிதமாகவும், 2016-17 ல் 10.6 சதவிகிதமாகவும் இருக்கிறது. தமிழகத்தில் பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

புகைப்பவர்கள் விடும் புகையால் பாதிக்கப்படுவோரை பொருத்தவரை அலுவலகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் மற்றவர்கள் பாதிப்புக்குள்ளாவது, அலுவலகம் போன்ற பணிபுரியும் இடங்களில் அதிகம் இருக்கிறது என ஆய்வறிக்கை கூறுகிறது. அடுத்தபடியாக வீட்டில் 11 சதவிகிதம் பேரும், பொதுப்போக்குவரத்தில் 5.8 சதவிகிதம் பேரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். திரையரங்குகளில் 4.4 சதவிகிதமும், விடுதிகளில் 3.3 சதவிகிதம் பேரும் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டுக்கு  சிகரெட்டுகள் விற்பனை  2010 ல் 986.2 கோடி ரூபாயாகவும் சமீபத்திய கணக்கெடுப்பில் 1,343.8 கோடி ரூபாயாகவும்  உயர்ந்து உள்ளது.

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் எண்ணற்றவை. அதன்மூலம் ஏற்படும் நோய்கள் நம்மை வாழும்போதே நரகத்திற்கு கொண்டு செல்லும் என புகையிலையால் பாதிக்கப்பட்டார்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். புகையிலைப் பொருட்கள் தடை செய்வது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாகும் என நுகர்வோர் அமைப்பினர் கூறுகின்றனர். மேலும் சிகரெட்டுக்கு பதிலாக ஈ சிகரெட் என்றழைக்கப்படும் மாற்று சிகரெட்டும், புகைபிடிப்பதற்கு இணையான தீமையை தரும் என்பதால் அதனையும் தடை செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story