பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்கள் திரும்பப் பெறுவதில் புதிய நடைமுறை தமிழக அரசு உத்தரவு


பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்கள் திரும்பப் பெறுவதில் புதிய நடைமுறை தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 4 Sep 2018 9:36 PM GMT (Updated: 2018-09-05T03:06:35+05:30)

பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்கள் திரும்பப் பெறுவதில் புதிய நடைமுறை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் பதிவு செய்யப்படும்போது அதற்கு தேவையான முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு உரிய ரசீது சார்பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு, ஆவணத்தினை பதிவுக்கு தாக்கல் செய்தவருக்கு அளிக்கப்படுகிறது. அசல் ஆவணத்தினை, பதிவுக்கு தாக்கல் செய்தவர் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தாக்கல் செய்தவர் அசல் ஆவணத்தை திரும்பப்பெற சார்பதிவாளர் அலுவலகம் வர இயலாத நிலையில் ஆவணம் அல்லது ஆவணச்சுருக்கம் இணையதளத்தில் உருவாக்கும்போது அந்த ஆவணத்தை திரும்பப்பெற உரிய நபரை நியமனம் செய்யலாம். ஆவணப்பதிவின்போது ஆவணத்தை திரும்பப்பெற நியமனம் செய்யப்பட்டவரின் விரல் ரேகை பதிவு செய்யப்படும்.

ஆவணத்தை தாக்கல் செய்தவர் அல்லது ஆவணத்தை திரும்பப்பெற அதிகாரம் பெற்றவர் ஆவணத்தை திரும்பப்பெற நேரில் சார்பதிவாளர் அலுவலகம் செல்லவேண்டும். பதிவு விதிகள் 1949 விதி 103-ன் படி ரசீதினை, சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து ஆவணத்தை திரும்பப்பெறும்போது சார்பதிவாளரிடம் அளிக்கவேண்டும். பின்பு தாக்கல் செய்தவர் அல்லது திரும்பப்பெற அதிகாரம் பெற்றவரின் விரல் ரேகை பெறப்படும். இந்த விரல் ரேகை ஆவணப்பதிவின்போது பெறப்பட்ட விரல் ரேகையுடன் மென்பொருளால் ஒப்பிட்டுப்பார்க்கப்படும். இந்த விரல் ரேகை உரிய நபரின் விரல் ரேகையாக இருப்பின் மென்பொருள் வழி சார்பதிவாளரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். சார்பதிவாளரால் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்பே ஆவணம் உரிய நபருக்கு திரும்ப வழங்கப்படும்.

சார்பதிவாளர் அலுவலகங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு சராசரியாக ஒரு நாளைக்கு இருபதுக்கும் குறைவாக ஆவணங்கள் பதிவாகும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவிலிருந்து 2-வது வேலை நாளிலும் இருபதுக்கும் மேல் பதிவாகும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவிலிருந்து 3-வது வேலை நாளிலும் ஆவணங்கள் திரும்ப வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆவணம் திரும்ப வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் ஆவணப்பதிவின்போது வழங்கப்படும் ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் உரிய நபர் சார்பதிவாளர் அலுவலகம் வந்து அசல் ஆவணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். அசல் ஆவணத்தை ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் திரும்ப வழங்காவிடில் 18001025174 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். உரிய நாளில் ஆவணம் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து திரும்பப் பெறப்படாத நிலையில் அந்த ஆவணத்துக்கு பாதுகாப்பு கட்டணம் சார்பதிவாளரால் ஆவணம் திரும்ப வழங்கும்போது வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story