நெடுஞ்சாலை திட்டத்துக்கு நிலம் ஆர்ஜிதம்: மத்திய அரசின் சட்டம் செல்லும் ஐகோர்ட்டு உத்தரவு


நெடுஞ்சாலை திட்டத்துக்கு நிலம் ஆர்ஜிதம்: மத்திய அரசின் சட்டம் செல்லும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Sep 2018 11:30 PM GMT (Updated: 4 Sep 2018 10:51 PM GMT)

தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய நில ஆர்ஜிதம் சட்டத்தில் பிரிவு 105 அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்ல. இந்த பிரிவு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை-சேலம் வரையிலான 8 வழி பசுமைச்சாலை திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக நிலத்தை தமிழக அரசு அளவிடும் பணியை மேற்கொண்டது.

இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தங்களது விவசாய நிலங்களை அளவிடக்கூடாது என்று போராட்டம் நடத்தினர். மேலும், இந்த திட்டத்துக்காக, குளங்கள், மரங்கள், மலைகளை அழிக்க அரசு முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினர்.

இந்த திட்டத்தை எதிர்த்தும், இந்த திட்டத்துக்காக நிலத்தை கையப்படுத்துவதை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்குகள் கடந்த சில நாட்களுக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தில் இருந்து, அதன் உரிமையாளர்களை வெளியேற்றக்கூடாது என்று அந்த நடவடிக்கைக்கு தடை விதித்தும் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பின் நிர்வாகி ஜி.சுந்தரராஜன் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். அந்த வழக்கில் கூறியிருப்பதாவது:-

‘நியாயமான இழப்பீடு, நில ஆர்ஜிதத்தில் வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தும் உரிமைச்சட்டத்தை’ கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, ஒரு திட்டத்துக்காக நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கு முன்பு, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கிராமசபையின் கருத்து கேட்கவேண்டும்.

அவர்கள் இந்த நிலம் பொது பயன்பாட்டிற்காகத்தான் ஆர்ஜிதம் செய்யப்படுகிறது என்பதையும், அதற்கு தங்களது நிலத்தை எடுத்துக்கொள்ள சம்மதம் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு சம்மதம் தெரிவித்தபின்னர், இந்த நில ஆர்ஜிதத்தினால், அவர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும்.

அவர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும். அங்கு ஏற்கனவே இருந்த இடத்தில் உள்ள பள்ளிக்கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கவேண்டும். இந்த சட்டம் கடந்த 2014-ம் ஆண்டு அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தில் பிரிவு 105 மட்டும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளது.

இந்த சட்டப்பிரிவு, தேசிய நெடுஞ்சாலை, அணுமின்நிலையம், மெட்ரோ ரெயில் உள்ளிட்ட 13 திட்டங்களுக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யும்போது மட்டும், பொதுமக்களின் கருத்து கேட்பது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள தேவையில்லை என்று கூறுகிறது.

இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி, சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்துக்கு காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலத்தை கையகப்படுத்த உள்ளனர். இது சட்டவிரோதமானது ஆகும். இந்த 105 சட்டப்பிரிவை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் நேற்று தீர்ப்பு அளித்தனர். அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

நிலம் ஆர்ஜிதம் தொடர்பான மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்தில், பிரிவு 105, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று மனுதாரர் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் தான், நிலத்தின் உரிமையாளர்களுக்கு அதிக இழப்பீடு தொகை உள்ளிட்ட ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன.

மனுதாரர் கூறுவதுபோல இந்த சட்டப்பிரிவு நில உரிமையாளர்கள் மத்தியில் எந்த பாகுபாட்டையும், வேறுபாட்டையும் காட்டவில்லை. நெடுஞ்சாலை போன்ற பொதுப் பயன்பாட்டிற்காக நில ஆர்ஜிதம் செய்யும்போது விதிவிலக்கு அளிக்கும் இந்த சட்டப்பிரிவு அரசியல் அமைப்புச்சட்டத்துக்கு எதிரானது அல்ல. இந்த பிரிவு சட்டப்படி செல்லும். இதை ரத்து செய்ய தேவையில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

மேலும், இந்த 105 சட்டப்பிரிவை பயன்படுத்தி, சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கு தடை விதிக்கவேண்டும் என்று மனுதாரர் 2-வது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஆனால், இந்த திட்டத்துக்காக நிலத்தை ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டு, அவைகள் எங்கள் முன்பு விசாரணையில் உள்ளன. அதனால், மனுதாரரின் 2-வது கோரிக்கையை இந்த வழக்கில் நாங்கள் பரிசீலிக்கவில்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story