ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி


ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
x

கருணாநிதிக்கு ஆழ்வார் கள் ஆய்வு மையம் சார்பில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பார்வையற்ற மாணவர்கள் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவனரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். மேடையில் கருணாநிதி படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பு பெரிய அளவிலான மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள சிறுமலர் பார்வை திறன் குறைவுடையோர் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கருணாநிதி படத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த அந்த மோட்ச தீபத்தை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் சிறுமலர் பார்வை திறன் குறைவுடையோர் பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

கருணாநிதி படத்தை தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் திறந்து வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ஜெகத்ரட்சகனும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் பாடல்கள் மற்றும் அவருடைய பெருமைகளை பறைசாற்றும் பாடல்களை லஷ்மன் ஸ்ருதியின் மெல்லிசை குழுவினர் பாடினார்கள்.

அந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையாளராக பங்கேற்றார். இதையடுத்து ஊரான் அடிகளார் தலைமையில் அருளஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் தொடக்க உரை நிகழ்த்தினார். பேராசிரியர் தி.ராஜகோபாலன், புலவர் கோ.சாரங்கபாணி, முனைவர் சாரதா நம்பி ஆருரன், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், நாகை முகுந்தன், மோகனசுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.

தொடர்ந்து கருணாநிதிக்கு நாட்டுப்புற கலைஞர்கள் சார்பில் நாடகாஞ்சலியும், கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் கவிதாஞ்சலியும் நடந்தது. நிறைவாக, தமிழ் அறிஞர்கள் சார்பில் கருணாநிதிக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமை தாங்கினார்.

ஆன்மிக சொற்பொழிவாளர்கள் சுகிசிவம், இலங்கை ஜெயராஜ் மற்றும் முனைவர் தெ.ஞானசுந்தரம், டாக்டர் சுதா சேஷையன், முனைவர் அப்துல் காதர், பேராசிரியர் இரா.மோகன், வக்கீல் த.ராமலிங்கம், டாக்டர் பிரியா ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர். கவிஞர் கங்கை மணிமாறன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

முன்னதாக திருவாசகம், தேவாரம், திவ்யபிரபந்தம், திருவருட்பா பாடல்களும், நாராயண மந்திரம், 1008 வைணவ பாகவத அடியார்கள் திரண்டு ‘ராமானுஜர் நூற்றந்தாதி’யும் ஓதினார்கள். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கு.க.செல்வம், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story