ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல்


ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 4 Sep 2018 11:37 PM GMT (Updated: 2018-09-05T05:07:10+05:30)

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார்: ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல் ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் கூறினார்.

சென்னை,

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் கூறினார்.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் வரையிலான 70.20 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கும் ஒப்பந்தப்பணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்குமாரின் நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம் என்பவரது நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.200 கோடியில் முடிக்கவேண்டிய இந்த திட்டத்துக்கு ரூ.1,515 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நெல்லை-செங்கோட்டை-கொல்லம் வரையிலான 45.64 கி.மீ. தூரத்திற்கான ரூ.900 கோடி ஒப்பந்தப்பணி எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி பி.சுப்பிரமணியத்துக்கு சொந்தமான ‘வெங்கடாசலபதி அன்ட் கோ’ என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியை ரூ.130 கோடியில் முடித்துவிடலாம்.

மதுரை ரிங்ரோட்டை 4 வழிச்சாலையாக மாற்றும் ரூ.218.57 கோடி ஒப்பந்த பணி ‘பாலாஜி டோல்வேஸ்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான நாகராஜன் செய்யாத்துரை, எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி பி.சுப்பிரமணியத்துக்கு பினாமியாக உள்ளார்.

இதுபோல நெடுஞ்சாலைத்துறையில் பல ஒப்பந்தப்பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்த பணி ஒதுக்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. எனவே, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீதும், இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 13-ந் தேதி ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனரிடம் புகார் மனு கொடுத்தேன். எனவே, நான் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஏற்கனவே விசாரித்தபோது, இந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டார்.

அவர் தனது வாதத்தில், ‘மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணை அதிகாரி ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளார். பின்னர், அந்த விசாரணையின் வரைவு அறிக்கை அதிகாரிகள் வழியாக ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் கடந்த மாதம் 28-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், அவர் தகுந்த உத்தரவை விரைவில் பிறப்பிப்பார்’ என்று கூறினார்.

இதையடுத்து, நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Next Story