எம்.எல்.ஏ., மணக்க இருந்த மணப்பெண் மீட்பு தோழி வீட்டில் தங்கி இருந்ததாக தகவல்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. திருமணம் செய்ய இருந்த மணப்பெண் திடீரென மாயமானார். தற்போது அந்த மணப்பெண் மீட்கப்பட்டுள்ளார்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கும், கோபி அருகே உள்ள உக்கரம் பெரியார் நகரை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. சந்தியா எம்.சி.ஏ. பட்டதாரி. இவர்கள் 2 பேருக்கும் வருகிற 12-ந் தேதி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி சந்தியா, உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ள தன்னுடைய பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அன்று இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் பெற்றோர் கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்தியாவை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் சந்தியா, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அவருடைய தோழி வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து போலீசார் மணப்பாறைக்கு விரைந்து சென்று சந்தியாவை மீட்டனர். விசாரணையின்போது சந்தியா கூறுகையில், ‘எனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை. எனவே, கடந்த 1-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருச்சி அருகே மணப்பாறையில் உள்ள எனது தோழி வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டனர்’ என்றார்.
இதையடுத்து சந்தியாவை போலீசார் கோபி கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பாரதி பிரபா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து சந்தியா தனது பெற்றோரிடம் சென்றார்.
Related Tags :
Next Story