கணவரிடம் இருந்து பிரிக்க முயற்சி: ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக மணிப்பூர் பெண் வழக்கு


கணவரிடம் இருந்து பிரிக்க முயற்சி: ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக மணிப்பூர் பெண் வழக்கு
x
தினத்தந்தி 5 Sep 2018 10:58 PM GMT (Updated: 2018-09-06T04:28:06+05:30)

காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவரிடம் இருந்து தன்னை பிரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் முயற்சிப்பதாக பெண் தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு, சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் சோம்ரின் வாஷினோ டேவிட் (வயது 34). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மணிப்பூர் எனக்கு சொந்த மாநிலமாகும். நானும், பேமின் ஆப்ரா டேவிட் என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டோம். எங்களது திருமணத்துக்கு, எனது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து என் சகோதரி என்னை, ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கரின் வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் அழைத்துச் சென்றார். அப்போது அவர், என் கணவரை விட்டு பிரிந்து, பெற்றோருடன் செல்ல வேண்டும் என்று கூறினார். இதை நான் ஏற்கவில்லை.

இதையடுத்து என் குடும்பத்தினர் பலவிதமான தொந்தரவுகளை எனக்கும், என் கணவருக்கும் கொடுத்தனர். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

என் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையிலும், என்னையும், என் கணவரையும் ஒரு நாள் முழுவதும் வில்லிவாக்கம் போலீசில் உட்கார வைத்தனர். நான் என் கணவருடன்தான் செல்வேன் என்று உறுதியாக இருந்தேன்.

இதனால் போலீசாரால் எதையும் செய்ய முடியவில்லை. பின்னர், விசாரணை என்ற பெயரில் என் வீட்டிற்கு போலீசார் அடிக்கடி வந்தனர். இதனால், என் திருமண வாழ்க்கை பாதித்தது.

இதன்பின்னர், மகளிர் ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மீதான விசாரணைக்கு நானும், என் கணவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று போலீசார் வற்புறுத்தினர்.

மகளிர் ஆணையம் விசாரணைக்கு சென்றபோது, என் குடும்பத்தினருடன் வெளிநபர்கள் வந்திருந்தனர். நாங்கள் விசாரித்ததில், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் அனுப்பிய மதபோதகர்கள் சிலர் அவர்களுடன் இருந்தனர்.

இவர்கள் மகளிர் ஆணையம் அமைந்துள்ள பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருடன் வந்து என்னை மிரட்டினர். மேலும், ரெயில்வே பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் அங்கு வந்து, என்னை பெற்றோருடன் செல்லும்படி நிர்ப்பந்தம் செய்தார். நான் முழு விருப்பத்துடன் என் கணவருடன் வாழ்ந்து வருகிறேன்.

ஆனால், என் குடும்பத்தினருடன் சேர்ந்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர், என்னையும், என் கணவரையும் பலவிதத்தில் கொடுமை செய்கிறார்.

என் உடலில் தீய ஆவி உள்ளதாகவும், அதனால் மருத்துவ பரிசோதனைக்கு செல்லும்படியும் என்னை நிர்ப்பந்தம் செய்கிறார். இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ய சென்றேன். ஆனால், என் புகாரை அங்குள்ள அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர். அதேநேரம், வில்லிவாக்கம் போலீசார் என்னையும், என் கணவரையும் தொடர்ந்து தொந்தரவு செய்கின்றனர். அவ்வாறு எங்களை துன்புறுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார். பின்னர், இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர், வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். 

Next Story