கோஷமிட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தோம் என்று சொல்வது முற்றிலும் தவறு : தமிழிசை சவுந்தரராஜன்


கோஷமிட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தோம் என்று சொல்வது முற்றிலும் தவறு : தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 6 Sep 2018 12:03 AM GMT (Updated: 6 Sep 2018 12:03 AM GMT)

விமானத்தில் கோஷமிட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தோம் என்று சொல்வது முற்றிலும் தவறு என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி சென்ற விமானத்தில் சத்தமிட்ட மாணவியிடம் ஏன் இப்படி சத்தமிட்டாய். இது தவறல்லவா? பொது இடமல்லவா? என்று கேட்ட போது அந்தப் பெண் மறுபடியும் மறுபடியும் எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது அப்படித்தான் நடந்து கொள்வேன் என்றார். இதை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளே வந்து என்னிடம் நான் புகாரை எழுதிக் கொண்டிருந்த போது சொன்னார்கள்.

அவரது தந்தை, நான் தாய் ஸ்தானத்தில் இருந்து சொல்லியிருக்கலாம் என்கிறார். சொந்த தாய் பக்கத்தில் இருக்கும் போதே அடங்காமல் பொது இடத்தில் சத்தமிடும் பெண்ணை கண்டிக்காமல் இவர் மற்றவருக்கு அறிவுரை சொல்வதுதான் வேடிக்கை. அந்தப்பெண் மறுபடியும், மறுபடியும் அடங்காமல் பேசியதும், பேசிய சில சொற்கள் சில அமைப்புகளால் அதிகமாகப் பகிர்ந்து கொள்ளும் சொற்களாகவும் இருந்ததால் எனக்கு சந்தேகம் வந்து, அந்தப் பெண்ணின் பின்புலத்தை விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததால் தான் நான் புகார் அளிக்க உள்ளே செல்ல வேண்டும் என நினைத்தேன்.

ஆனால் அந்த பெண் வரம்பு மீறி பேசியது ஒளிப்பதிவு செய்யப்படாததாலும், ஒளிபரப்பப்படாததாலும் வேண்டுமென்றே என்னை மட்டும் குறிவைத்து தவறாக சித்தரித்து படம் வெளியிடப்படுவதாலும் உண்மை முற்றிலும் மறைக்கப்படுகிறது. கொலை மிரட்டல் விடுத்தோம் என்று சொல்வது முற்றிலும் தவறு.

அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அனைவரிடமும் நான் முன்வைக்கும் கேள்விகள் இதுதான். விமானத்திற்குள் கோஷமிடலாமா? நான் பொறுமையாக கேட்டபோது எதிர்குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் அமைதியாக அணுக முடியுமா?, 10.30 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் இருந்து 10.22 க்கு டாக்டர் தமிழிசை என்னுடன்தான் வருகிறார், நான் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. மோடி பாஸிச ஆட்சி ஒழிக என கோஷம் போடப் போகிறேன் என்று விமானத்திலிருந்தே ட்விட் செய்திருக்கிறார். இதை அனைவரும் ஆதரிக்கிறீர்களா?. முறையற்ற செயலை செய்யப்போகிறேன் என்று அறிவித்துவிட்டு முறைகேடாக நடந்து கொண்டது சரியா, இன்றைக்கு அந்தப் பெண் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தது அத்தனையும் ஏன் நீக்கப்பட்டிருக்கிறது. தன் அடையாளத்தை மறைப்பதற்காகத்தானே. காவல்துறைக்கு கொடுத்த புகாரில் அந்த பெண்ணின் தந்தை சாதியின் பெயரை குறிப்பிட்டிருப்பது சரியா?.

நான் ஒரு பெண் தலைவர் என்பதால் என்னை சமூக வலைத்தளங்களிலும் நேரிலும் எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம் என்ற மன நிலையுடனும் பலர் நடந்து கொள்வதும், அதை அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரிப்பதும் சரியானது அல்ல. என்னைப்பற்றிய கடுமையான விமர்சனங்களைக்கூட எதிர் கொள்ளும் எனக்கு பொறுமை வேண்டும் என்று ஆலோசனை சொல்வது வேடிக்கை.

இதனால் நான் கவலைப்படவில்லை. பொது வாழ்வில் தூய்மையான எண்ணத்துடனும் கடுமையான உழைப்பாலுமே மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற சிந்தனையுடனே நான் பயணிக்கிறேன். எத்தனை தடை கற்கள் காலில் குத்திக் கிழித்தாலும் மக்களுக்கான என் பயணம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story