மாணவி சோபியா விவகாரம் ஓயவில்லை : பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக தந்தைக்கு போலீஸ் சம்மன்


மாணவி சோபியா விவகாரம் ஓயவில்லை : பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக தந்தைக்கு போலீஸ் சம்மன்
x
தினத்தந்தி 6 Sep 2018 12:07 AM GMT (Updated: 6 Sep 2018 12:07 AM GMT)

மாணவி சோபியா விவகாரம் ஓயவில்லை. சோபியாவின் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக அவரது தந்தைக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.

சென்னை,

மாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வைகோ வலியுறுத்தி உள்ளார்.

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கடந்த 3-ந் தேதிக்கு தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அதே விமானத்தில் தூத்துக்குடியை சேர்ந்தவரும், கனடாவில் ஆராய்ச்சி மாணவியாகவும் உள்ள லூயிஸ் சோபியாவும் பயணம் செய்தார்.

தமிழிசையை பார்த்ததும் மாணவி சோபியா பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் போட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடர்பான புகாரின்பேரில், சோபியா மீது புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சோபியா கைதாகி, ஜாமீனில் விடுதலை ஆன பின்னரும் விவகாரம் ஓயவில்லை.

சோபியாவின் பாஸ்போர்ட்டுடன் 7-ந் தேதி புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அவரது தந்தைக்கு அந்த போலீஸ் நிலையம் சம்மன் அனுப்பி உள்ளது.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் சோபியாவுக்கு எதிராகவும், அவரை கடுமையாக விமர்சித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அதன் மண்டல செயலாளர் வக்கீல் குபேந்திரன், மயிலாடுதுறை போலீசில் கொடுத்துள்ள மனுவில், “இந்த சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த சுவரொட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும்” என கூறி உள்ளார்.

இதற்கு இடையே தூத்துக்குடி விவகாரத்தில் மாணவி சோபியா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி மயிலாடுதுறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நகர பாரதீய ஜனதா கட்சி தலைவர் மோடி. கண்ணன் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை 7-ந் தேதி (நாளை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மாஜிஸ்திரேட்டு செல்லப்பாண்டியன் உத்தரவிட்டார்.

இதே போன்று தமிழிசை சவுந்தரராஜன் மீது தேசிய ஆதி திராவிடர் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. துறை தலைவர் கு.செல்வபெருந்தகை, டெல்லியில் உள்ள தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு அனுப்பி உள்ள புகார் கடிதத்தில், “தமிழிசை சவுந்தரராஜன் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.

மாணவி சோபியா கனடாவில் மாண்டிரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருவதால், அவர் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்து உள்ள அறிக்கையில், “மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை கைப்பற்றி, முடக்க முயற்சிப்பதும், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து இருப்பதும், அவர் கனடாவில் கல்வியை தொடரத் தடையாக அமையும். பெரும் அநீதிக்கு வழிவகுக்கும். தமிழக அரசு உடனடியாக மாணவி சோபியா மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்” என கூறி உள்ளார்.

ஓட்டப்பிடாரத்தில் நடந்த வ.உ.சி. பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது “மாணவி சோபியாவிற்கு மிரட்டல் வருவதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க கூடிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம். யாருக்கும் யாரும் மிரட்டல் விட முடியாது. அப்படி மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது” என்று கூறினார்.


Next Story