காமராஜர், அண்ணா, திருவள்ளுவர், பாரதியார் பெயர்களில் விருதுகள் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு


காமராஜர், அண்ணா, திருவள்ளுவர், பாரதியார் பெயர்களில் விருதுகள் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
x
தினத்தந்தி 6 Sep 2018 9:30 PM GMT (Updated: 6 Sep 2018 8:44 PM GMT)

காமராஜர், அண்ணா, திருவள்ளுவர், பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களில் விருது பெற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களையும், தமிழுக்கு தொண்டு ஆற்றுபவர்களையும் சிறப்பிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பவர்கள் தன்விவர குறிப்புகளுடன் நிழற்படம் 2, எழுதிய நூல்களின் பெயர் பட்டியலுடன் அந்நூல்களில் ஒருபடி வீதம் தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்குனரகம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை- 600008 என்ற முகவரிக்கு 30-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

திருவள்ளுவர் விருது- திருக்குறள் நெறி பரப்புவோருக்கும், மகாகவி பாரதியார் விருது- பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக படித்து ஆய்வு மேற்கொண்டு பாரதியாரை பற்றிய கவிதைகள் மற்றும் அவரின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைத்தோர், பிறவகையில் தொண்டு செய்தோர் மற்றும் செய்பவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது- சிறந்த கவிஞர் ஒருவருக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது- சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது- சிறந்த தமிழ் அறிஞர் ஒருவருக்கும் வழங்கப்படும்.

பெருந்தலைவர் காமராஜர் விருது- இலவச கல்வித்திட்டம், சத்துணவு திட்டம் போன்றவை மூலமாக தமிழ் சமுதாயம் முன்னேற வழிவகுத்த பெருந்தகையாளரின் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வரும் ஒருவருக்கும், பேரறிஞர் அண்ணா விருது- தமிழ் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story