மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு 15-வது நிதிக்குழு பாராட்டு + "||" + To the Government of Tamil Nadu 15th Finance Committee Appreciation

தமிழக அரசுக்கு 15-வது நிதிக்குழு பாராட்டு

தமிழக அரசுக்கு 15-வது நிதிக்குழு பாராட்டு
நிதி பற்றாக்குறை மற்றும் கடன் விகிதாச்சாரத்தை தமிழக அரசு மிக சிறப்பாக கையாள்கிறது என்று 15-வது நிதிக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் அரசு துறை செயலாளர்களுடன் என்.கே.சிங் தலைமையிலான மத்திய 15-வது நிதிக்குழு நேற்று ஆலோசனை நடத்தியது.


கூட்ட முடிவில் என்.கே.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

15-வது நிதிக்குழு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. 5-ந் தேதி அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் நான் மற்றும் நிதிக்குழுவின் உறுப்பினர்கள் அனூப்சிங், அசோக் லகரி, ரமேஷ்சந்த், செயலாளர் அரவிந்த் மேத்தா உள்ளிட்டோர் பங்கேற்றோம்.

தமிழ்நாட்டின் நிதி ஒதுக்கீடு தேவை மற்றும் பிரத்யேக தேவைகள் தொடர்பாக தமிழக அரசு வழங்கிய செயல் விளக்கம் மற்றும் கோரிக்கை மனுவிலும் மிகவும் தெளிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, என்.கே.சிங் பதில் அளித்து கூறியதாவது:-

தமிழ்நாட்டின் முன்னோடித் திட்டங்கள் குறிப்பாக இலவச திட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இவற்றில் மாநில அரசின் முன்னுரிமைகளை வெளிப்படுத்தவில்லை. மத்திய அரசின் தேவைகள் மற்றும் மாநில அரசின் தேவைகள் ஆகியவற்றில் நடுநிலையோடு நிதிக்குழு இருந்துவந்துள்ளது.

கவர்ச்சி திட்டங்கள் என்று அழைக்கப்படும் திட்டங்கள் கூட ஒருகட்டத்தில் மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டமாக மாறிவிடுகின்றன. சத்துணவுத் திட்டமும் அவ்வாறு பேசப்பட்டு, தற்போது இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டமாக உள்ளது.

ஆக்கபூர்வமான பாரம்பரியம் மிக்க நடைமுறைகளை பின்பற்றுவது என்று இந்த நிதிக்குழு உறுதி பூண்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், வறுமை ஒழிப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்பினை வழங்கியுள்ளது. தனிநபர் வருமானத்தையும் சிறப்பான முறையில் உயர்த்தியுள்ளது. நிதி மேலாண்மையிலும் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்துள்ளது.

நிதிப் பற்றாக்குறையையும் குறிப்பாக பெரும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றை நிர்வகிப்பதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடன் விகிதாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் பராமரித்துள்ளது. கடன்களையும் மிகவும் சிறப்பாக கையாண்டு வந்துள்ளது. இவை நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மாநில அரசு மேற்கொண்டு வரும் சவால்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நகர்ப்புற மக்கள் தொகை 50 சதவீதத்தை எட்டிய மாநிலங்களில் தமிழ்நாடு முன்னெட்டிச் செல்கிறது. நகர்ப்புறமயமாக்கல் என்பது வாய்ப்புகளை வழங்குவதில் சவால்களை ஏற்படுத்துகின்றன. ஆனால் திட்டமிட்ட நகர்ப்புறமயமாக்கல் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் பலனளிக்கும். இந்த சவால்களுடன் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு புலம்பெயர்ந்த மக்கள் தொகை உள்ளது.

புலம்பெயரும் மக்கள் தொகை மனிதவள பற்றாக்குறையையும், தொழிலாளர் பற்றாக்குறையையும் தீர்க்க வழிவகுக்கும். ஆனால் மாநிலத்தின் வளங்களில் பிரச்சினையை ஏற்படுத்தலாம். குறிப்பாக கட்டமைப்பு வசதிகளை இங்குள்ளவர்களுடன் பங்குபோட இந்த புலம்பெயரும் மக்கள் வருவதால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

தமிழ்நாட்டின் மொத்த கருவுறும் விகிதம் குறைவாக இருக்கிறது. ஆனால் முதியோர் மக்கள் தொகை மேலும் அதிகரித்து வருவதால் மாநில அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. முதியோருக்கு சிறந்த மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. இதனால் மாநில அரசின் நிதியில் புதிய சவால்கள் ஏற்படுகின்றன.

தமிழ்நாடு தொடர்ந்து அன்னிய முதலீடுகளை கவர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாடே இந்திய வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக திகழ்ந்து வருகிறது. சென்னை போன்ற மிகப்பெரிய நகரங்களை நிர்வகிக்க குறிப்பாக நீர் ஆதாரங்களை வழங்க நிதிப்பற்றாக்குறை நிலவுவது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒரு மாநிலம் தனது திறமையால் மிகவும் சிறப்பாக செயல்பட்ட காரணத்திற்காக ஊக்கம் அளிக்கப்பட வேண்டுமே தவிர தண்டிக்கப்படக்கூடாது.

பாரம்பரிய கட்டிடங்களைப் பராமரிக்கவும், சுற்றுலா மையங்களை பலப்படுத்தவும் குறிப்பாக வளமான சுற்றுலா வாய்ப்புகளைக் கொண்ட சில பகுதிகளை மேம்படுத்தவும், நீர் மேலாண்மையை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கைகளை நிதிக்குழு கருத்தில் கொண்டுள்ளது. 2019 அக்டோபர் இறுதியில் தனது பரிந்துரைகளை இந்த நிதிக்குழு தெரிவிக்கும்.

தமிழ்நாட்டின் தனித்துவமிக்க தேவைகளை எதிர்கொள்ளும் விதமாகவும், தமிழ்நாட்டின் செயல்பாட்டுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் பரிந்துரை செய்யும். தொடர்ந்து அன்னிய முதலீடுகளை கவர்ந்திழுக்கும் மாநிலமாக திகழும் வகையில் இந்த பரிந்துரைகள் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.