குட்கா ஆலை உரிமையாளர், அதிகாரிகள் உள்பட 5 பேர் கைது சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை


குட்கா ஆலை உரிமையாளர், அதிகாரிகள் உள்பட 5 பேர் கைது சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Sep 2018 11:45 PM GMT (Updated: 6 Sep 2018 10:24 PM GMT)

குட்கா ஊழல் வழக்கில் சோதனை முடிந்த கையோடு அதிரடியாக ஆலை உரிமையாளர், அதிகாரிகள் உள்பட 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை செங்குன்றத்தில் இயங்கி வந்த ‘குட்கா’ ஆலையில் 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆலை உரிமையாளர் மாதவராவின் ரகசிய ‘டைரி’ அதிகாரிகள் கையில் சிக்கியது. அதில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை தயாரிப்பதற்கும், தமிழகம் முழுவதும் விற்பனை செய்வதற்கும் ரூ.40 கோடி லஞ்சம் கைமாறிய தகவல் இடம் பெற்றிருந்தது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. தொடர்ந்த மனு மூலம் ‘குட்கா’ ஊழல் வழக்கு சி.பி.ஐ. வசம் கை மாறியது. ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று சி.பி.ஐ. ஏப்ரல் 26-ந் தேதி வழக்குப்பதிவு செய்தது. இதனால் இந்த வழக்கு விசுவரூபம் எடுத்தது. ஊழல் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் திரட்டி இருந்த ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர்.

அதன் அடிப்படையில் ‘அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், மதுரை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு மன்னர் மன்னன், தூத்துக்குடி ‘சிப்காட்’ இன்ஸ்பெக்டர் சம்பத், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், லட்சுமி நாராயணன், சிவகுமார், மத்திய கலால்துறை அதிகாரிகள் குல்சர்பேகம், என்.கே.பாண்டியன், சேஷாத்ரி, விற்பனை வரித்துறை அதிகாரிகள் பன்னீர்செல்வம், குறிஞ்சிசெல்வம், கணேசன் ஆகியோரது வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் உள்பட 35 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீடு மற்றும் அலுவலகம் உள்பட பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினமே சி.பி.ஐ. சோதனை நிறைவுக்கு வந்தது. முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் வீட்டில் நேற்று காலை சோதனை முடிந்தது.

இதையடுத்து சோதனையில் சிக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகிய 5 பேரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். விசாரணை முடிவில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான 5 பேரையும் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. முதன்மை கோர்ட்டில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவர்களை 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்க சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர் மற்றும் பங்குதாரர்கள் சார்பில் ஜாமீன் கோரி உடனடியாக மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக சி.பி.ஐ. தரப்பில் தனியாக மனுதாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்கு இடைத்தரகர்கள் மூலமாகவே அதிகாரிகளுக்கு லஞ்ச பணம் கைமாறி இருப்பது சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. அதனடிப்படையில் ராஜேந்திரன், நந்தகுமார் ஆகிய 2 தரகர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் பிடியில் சிக்கினர்.

அவர்களிடம் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு சி.பி.ஐ. சாட்சிகளாக மாறியதாகவும், கைது நடவடிக்கையில் இருந்து தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Next Story