தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வீழ்ச்சி


தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வீழ்ச்சி
x
தினத்தந்தி 7 Sep 2018 8:04 PM GMT (Updated: 7 Sep 2018 8:04 PM GMT)

கர்நாடகாவில் பருவமழை அதிகரிப்பால், தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.

சென்னை,

இந்தியாவின் தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் இந்த ஆண்டு அதிக அளவில் தென்மேற்கு பருவமழை பெய்தது. இதில் கேரளாவில் சில இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் அதிக மழை பெய்ததால் இந்த ஆண்டு அரிசி உற்பத்தி அதிகரித்து இருக்கிறது.

மேலும் தென்மேற்கு பருவமழையால் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, தமிழகத்துக்கு தேவையான நீர் வந்தடைந்தது. இதனால் தமிழகத்திலும் நெல் அறுவடை அதிகரித்தது. இந்த நிலையில் கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அரிசி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் விற்கப்படும் 25 கிலோ மூட்டை அரிசி விலை ரூ.50 முதல் ரூ.100 வரை குறைந்துள்ளது. தமிழகத்தில் ரூ.700-க்கு விற்கப்பட்டு வந்த ஏ.டி.டி. 47 ரக பொன்னி (25 கிலோ) தற்போது ரூ.630 ஆகவும், ரூ.750-க்கு விற்கப்பட்ட கோ.51 பொன்னி ரூ.570 ஆகவும், ரூ.900-க்கு விற்கப்பட்ட டீலெக்ஸ் பொன்னி ரூ.800 ஆகவும் குறைந்துள்ளது.

மேலும் ரூ.1150-க்கு விற்கப்பட்ட ஆந்திரா ஸ்டீம் அரிசி(முதல் ரகம்) ரூ.1050 ஆகவும், ரூ.1000-க்கு விற்கப்பட்ட ஆந்திரா ஸ்டீம் அரிசி(இரண்டாவது ரகம்) ரூ.900 ஆகவும், ரூ.1250-க்கு விற்கப்பட்ட கர்நாடக ஸ்டீம் அரிசி(முதல் ரகம்) ரூ.1150 ஆகவும், ரூ.1100-க்கு விற்கப்பட்ட கர்நாடக ஸ்டீம் அரிசி (இரண்டாவது ரகம்) ரூ.1000 ஆகவும், ரூ.700-க்கு விற்கப்பட்ட இட்லி அரிசி ரூ.600 ஆகவும் குறைந்துள்ளது. மேலும் வரும் மாதங்களில் இன்னும் சரியக்கூடும் என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்தார்.

Next Story