மாநில செய்திகள்

விசாகா கமிட்டியை மாற்றி அமைக்கக்கோரி பெண் போலீஸ் அதிகாரி வழக்கு + "||" + Visa Committee Set Converter The case of the girl police officer

விசாகா கமிட்டியை மாற்றி அமைக்கக்கோரி பெண் போலீஸ் அதிகாரி வழக்கு

விசாகா கமிட்டியை மாற்றி அமைக்கக்கோரி பெண் போலீஸ் அதிகாரி வழக்கு
விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று புகார் கொடுத்த பெண் போலீஸ் சூப்பிரண்டு ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐ.ஜி.யை மாற்ற வேண்டும், இந்த புகாரை விசாரிக்கும் விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று புகார் கொடுத்த பெண் போலீஸ் சூப்பிரண்டு ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிவரும் ஐ.ஜி. மீது அதே துறையில் பணியாற்றிய பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். இதுகுறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த கமிட்டியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவரை உறுப்பினராக நியமிக்கவில்லை. அதனால் கமிட்டியை கலைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், ஐ.ஜி. மீது பாலியல் குற்றம் சுமத்திய பெண் போலீஸ் சூப்பிரண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு பாலியல் தொந்தரவு செய்த ஐ.ஜி. மேல் அதிகாரி என்பதால் அவரிடம் நான் தினமும் பணி குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு பணி தொடர்பாக நான் பேசச்சென்றால், என் உடை மற்றும் சிகை அலங்காரத்தை பற்றி பேசுவார். இது எனக்கு அசவுகரியத்தை கொடுத்தது. அவர் அறைக்கு செல்லும்போது எல்லாம் என்னை செல்போனில் படம் பிடிப்பார்.

இரவு நேரங்களில் தேவையில்லாமல் போன் செய்து என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவார். இதனால் அவரிடம் போனில் பேசுவதை தவிர்த்தேன். மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் என்னை அவரது அறைக்கு அழைத்து தனியாக உட்காரவைத்து தேவையில்லாத கேள்விகளை கேட்பார். இவரது செயலை தாங்கமுடியாமல் ஒரு கட்டத்தில் நான் எதிர்ப்பு தெரிவித்தபோது என்னை அவர் மிரட்டத் தொடங்கினார்.

இந்தநிலையில், கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி அவரது அறைக்கு நான் சென்றபோது கதவை மூடிவிட்டு என்னை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்றார். நான் கடுமையாக போராடி அவரிடம் இருந்து தப்பித்து அறையைவிட்டு வெளியில் வந்தேன். இதுகுறித்து வாய்மொழியாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் உடனடியாக புகார் செய்தேன். பின்னர் ஆகஸ்டு 3-ந்தேதி எழுத்துப்பூர்வமாக புகார் செய்தேன்.

இதையடுத்து என் புகார் குறித்து விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. நான் குற்றம் சுமத்தியுள்ள ஐ.ஜி. தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் தான் பணி செய்கிறார். இதனால் இவருக்கு பயந்து லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் சாட்சி சொல்ல தயங்குகின்றனர்.

அதனால் ஐ.ஜி.யை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி., லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், தலைமை நிலைய ஐ.ஜி. வித்யா குல்கர்னி, ஊழல் தடுப்பு ஆணையர் மோகன்பியாரே ஆகியோரை என் குடும்பத்துடன் சந்தித்து புகார் செய்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில், என் குற்றச்சாட்டுக்கு உள்ள ஆதாரங்களை பட்டியலிட்டு, அந்த பட்டியலுடன் 48 மணி நேரத்துக்குள் விசாகா கமிட்டி முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் எனக்கு உத்தரவிட்டார். ஆதாரங்களை திரட்ட போதிய அவகாசம் எனக்கு வழங்கப்படவில்லை. மேலும், விசாகா கமிட்டியில் வெளிநபர்கள் அதாவது தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக நியமிக்கவில்லை.

மேலும், 2013-ம் ஆண்டே விசாகா கமிட்டி அமைத்து தமிழக உள்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டார். தற்போது அந்த விசாகா கமிட்டியை கலைத்துவிட்டு, புதிய கமிட்டியை தமிழக டி.ஜி.பி. ஏன் உருவாக்கியுள்ளார்? என்பது தெரியவில்லை.

எனவே, கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைத்து ஆகஸ்டு 17-ந்தேதி தமிழக டி.ஜி.பி. பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் புதிய கமிட்டியை உருவாக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், குற்றச்சாட்டில் சிக்கிய ஐ.ஜி.யை வேறு பிரிவுக்கு மாற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஐ.ஜி. மீது குற்ற நடவடிக்கையும் எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சத்ருஹன புஜாரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் தாட்சாயினி ஆஜராகி, ‘மனுதாரர் ஆகஸ்டு 3-ந்தேதி எழுத்துப்பூர்வமாக புகார் செய்தும், இதுவரை உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. எனவே, டி.ஜி.பி. அமைத்துள்ள விசாகா கமிட்டியை கலைத்துவிட்டு, புதிய கமிட்டியில் பெண்கள் நல அமைப்புகளை சேர்ந்த ஒருவரை உறுப்பினராக சேர்க்க உத்தரவிட வேண்டும். அப்போது தான் மனுதாரருக்கு நியாயம் கிடைக்கும்’ என்றார்.

குற்றச்சாட்டுக்குள்ளான ஐ.ஜி. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.தியாகராஜன், ‘மனுதாரர் இந்த பாலியல் புகாரை லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள விசாகா கமிட்டியிடம் கொடுக்கவில்லை. அந்த விசாகா கமிட்டியின் தலைவராக மனுதாரர் தான் இருந்தார்’ என்றார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வக்கீல் தாட்சாயினி, ‘அப்படியென்றால் மனுதாரரின் புகாரை, மனுதாரரே விசாரித்து முடிவு எடுத்துக்கொள்ள முடியுமா? தனக்கு தொல்லை கொடுத்த ஐ.ஜி.யை பணியிட மாற்றம் செய்து அவரே உத்தரவிடலாமா? இதை ஏற்றுக்கொண்டால் இந்த வழக்கையே வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்’ என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘விசாகா கமிட்டியை மாற்றியமைக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அரசின் கருத்தை கேட்டுத்தான் பதிலளிக்க முடியும்’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் வக்கீல், ‘லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 5-ந்தேதி வரை பதிவானவைகளை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார்.

இதற்கு அட்வகேட் ஜெனரல், ‘இந்த கேமரா பதிவை 2 நகல் எடுத்து, ஒன்று விசாகா கமிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொன்று முத்திரையிடப்பட்ட கவரில் பாதுகாப்பாக உள்ளது’ என்றார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.