மாநில செய்திகள்

சூடு பிடிக்கும் குட்கா ஊழல்: சட்டவிரோத பணப்பரிமாற்றம் அமலாக்கத்துறை விசாரணை + "||" + Hot gutka scandal Illegal money transfers Enforcement proceedings

சூடு பிடிக்கும் குட்கா ஊழல்: சட்டவிரோத பணப்பரிமாற்றம் அமலாக்கத்துறை விசாரணை

சூடு பிடிக்கும் குட்கா ஊழல்: சட்டவிரோத பணப்பரிமாற்றம் அமலாக்கத்துறை விசாரணை
சூடு பிடிக்கும் குட்கா ஊழல் வழக்கு ரூ.60 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததா அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. #GutkhaScam #George #CBI
சென்னை

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சென்னை, திருவள்ளுர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் உள்பட 35 இடங்களில் கடந்த 5-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, போலீஸ் டி.ஜி.பி.டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் உள்ளிட்டோரின் வீடுகளும் சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.

சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் சிக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கையில் இறங்கினார்கள். அதன்படி குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் யாதவ், சீனிவாசராவ், அதிகாரிகள் என்.கே.பாண்டியன், செந்தில்முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு வருகிற 20-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணைக்காக கைது செய்யப்பட்ட 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் சார்பில் வருகிற திங்கட்கிழமை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கைதானவர்களும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். அதற்கு சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.

குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது உண்மை என்று அப்ரூவராக மாறி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ இதுவரை 7 பேரை கைது செய்து உள்ளது. இந்நிலையில் குட்கா விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் ரூ 60 கோடி மோசடி நடந்ததாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகளிடம் இருந்து ஆவணங்களை பெற்ற அமலாக்கத் துறை தனது விசாரணையை தொடங்கியது. இதனால் இந்த வழக்கு மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

 ஜார்ஜ் வெளியிட்ட ஆவணங்கள், அறிக்கை விபரங்களை திரட்டுகிறது அமலாக்கத்துறை.