டி.ஜி.பி. ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக கோரி செப்டம்பர் 18ந்தேதி ஆர்ப்பாட்டம்; மு.க. ஸ்டாலின்


டி.ஜி.பி. ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக கோரி செப்டம்பர் 18ந்தேதி ஆர்ப்பாட்டம்; மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 8 Sep 2018 7:53 AM GMT (Updated: 8 Sep 2018 7:53 AM GMT)

டி.ஜி.பி. ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி செப்டம்பர் 18ந்தேதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்டு 7ந்தேதி மறைந்த நிலையில் கட்சிக்கான புதிய தலைவராக மு.க. ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  இதனை தொடர்ந்து முதன்மை செயலாளர் துரைமுருகன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதன்முறையாக தி.மு.க.வின் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது.  இந்த கூட்டத்தில் பொது செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் ஆ. ராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் 88 எம்.எல்.ஏ.க்கள், 65 மாவட்ட செயலாளர்கள், 4 எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சி பணிகள், முப்பெரும் விழா, இடைத்தேர்தல், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஆகியவை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மு.க. ஸ்டாலின், ஊழலின் மொத்த உருவான அ.தி.மு.க. அரசை ஒருபோதும் அனுமதியோம்.  ஊழல் அரசின் முகத்திரையை கிழிக்க செப்டம்பர் 18ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.

இந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.  அதன்படி, பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய அமைச்சரவை கூட்டத்தினை கூட்டி ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும்.  மத்திய பா.ஜ.க.வின் காவிமய கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம்.

காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லவும், கடலில் வீணாக கலக்காமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குட்கா விவகாரத்தில் டி.ஜி.பி. ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி மிக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இதற்காக அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

Next Story