அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ புதிய சேனல் ’நியூஸ் ஜெ’ 12 ந்தேதி சோதனை ஓட்டம் தொடக்கம்


அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ புதிய சேனல் ’நியூஸ் ஜெ’ 12 ந்தேதி சோதனை ஓட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 8 Sep 2018 8:28 AM GMT (Updated: 8 Sep 2018 8:28 AM GMT)

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ புதிய சேனல் நியூஸ் ஜெ சோதனை ஓட்டம் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள். #NewsJ #AIADMK

சென்னை:

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது.

இதனால் அ.தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர். நாளேடு, ஜெயா டி.வி. ஆகியவை சசிகலா கட்டுப்பாட்டிற்கு சென்றது. அதனை டி.டி.வி. தினகரன் தற்போது நிர்வகித்து வருகிறார்.

ஆளும் கட்சியான அ.தி.மு.க.விற்கு இதுவரையில் இருந்த ஜெயா டி.வி. சசிகலா தரப்பிற்கு சென்றதால் புதிய டி.வி. சேனலை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதற்கான ஆயத்த பணிகளை கடந்த சில மாதங்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் மேற்கொண்டனர்.

செய்தி சேனலாக தொடங்க திட்டமிட்டு ஜெயலலிதா பெயரில் அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி “நியூஸ் ஜெ” என்று அ.தி.மு.க.வின் புதிய டி.வி.க்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய டி.வி. சோதனை ஓட்டம் வருகிற 12-ந்தேதி முதல் தொடங்குகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள்.

டி.வி.யின் லோகோ, மொபைல் ஆப், இணைய தளம், சமூக வலைதளங்கள்,    போன்றவை அன்று தொடங்கப்படுகிறது. ‘நியூஸ் ஜெ’ புதிய டி.வி.யின் முழுமையான ஒளிபரப்பு இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது.

பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள், அறிவிப்புகள், செயல்பாடுகள் குறித்த அனைத்து தகவலையும் முன்னெடுத்து செல்லும் வகையில் நியூஸ் ஜெ தயாராகி வருகிறது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆதாரங்களின்படி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா புதிய சேனலின் செயல்பாட்டுக்கு தலைமை தாங்குகிறார். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கட்சி சார்பில் இரு டிவிக்கள் தொடங்கவும் திட்டமிப்பட்டு உள்ளது.

ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆர் ஆகியவை கட்சியின் பிரசார ஊடகங்களாக செயல்பட்டு வந்தது. வி.கே.சசிகலாவின் குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது. பிளவுக்கு பிறகு அது தினகரனின் அம்மா முன்னேற்ற கழக பிரசார ஊடகமாக உள்ளது. இதை தொடர்ந்து  அ.தி.மு.க. தனது சொந்த தொலைக்காட்சி சேனலையும் செய்தித்தாளையும் தொடங்க முடிவு செய்துள்ளது. பிப்ரவரியில், அதிமுக பிரசார பத்திரிகையாக , நமது அம்மா, தொடங்கப்பட்டது.

Next Story