காவல் துறை உயர் அதிகாரிகளை மிரட்டி வந்த புல்லெட் நாகராஜ் பெரியகுளத்தில் கைது


காவல் துறை உயர் அதிகாரிகளை மிரட்டி வந்த புல்லெட் நாகராஜ் பெரியகுளத்தில் கைது
x
தினத்தந்தி 10 Sep 2018 5:00 AM GMT (Updated: 10 Sep 2018 5:00 AM GMT)

காவல் துறை உயர் அதிகாரிகளை மிரட்டி வந்த புல்லெட் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி,


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிபறி என ஏராளமான வழக்குகள் உள்ளன.இவரது அண்ணன் 2006- இல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அவ்வப்போது தூக்க மாத்திரைகளை உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் சிறைச்சாலையில் உடல் பரிசோதனை செய்ய வந்த டாக்டரிடம் தனக்கு தூக்க மாத்திரை வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் தான் அணிந்திருந்த சட்டையை கிழற்றி பெண் மருத்துவர் மீது வீசினார். இதையறிந்த மதுரை சிறைத் துறை பெண் எஸ்பி ஊர்மிளா காவலர்களை அனுப்பி நாகராஜனின் அண்ணனை அடித்துள்ளனர்.

இதனிடையே அவர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தன்னை எஸ்பி ஊர்மிளா அடித்து துவைத்ததை தம்பியிடம் கூறி பொங்கியுள்ளார். இதையடுத்து எஸ்பி ஊர்மிளாவுக்கு போன் போட்ட புல்லட் நாகராஜன், பெண் அதிகாரியிடம் மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.அதிகாரியை எரித்து கொன்றது ஞாபகம் இருக்கிறதா, உங்கள் மேல் லாரி ஏறும் என அடுத்தடுத்து மிரட்டல் விடுத்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பெண் அதிகாரியை புல்லட் நாகராஜன் மிரட்டியுள்ளார்.

பெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் போன் செய்துள்ளார் புல்லட் நாகராஜன். அப்போது அவர் பேசுகையில் இனி யாரையும் அடிக்கக் கூடாது. எங்கள் ஆள் மேல் கை வைத்தால் வேட்டையாடுவேன். யாரையும் கைது செய்து சட்டவிரோதமாக லாட்ஜில் வைத்து அடிக்கக் கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

போலீஸாருக்கே பெரும் சவாலாக உள்ள புல்லட் நாகராஜனை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவை மிரட்டிய வழக்கில் ரவுடி புல்லட் நாகராஜை பிடிக்க 7 பேர் கொண்ட தனிப்படை தேனி விரைந்து தீவிரமாக தேடி வந்தது. இந்த சூழலில், நேற்று ஒரு மிரட்டல் ஆடியோவை புல்லெட் நாகராஜ் வெளியிட்டார். 

இவ்வாறு தொடர்ந்து ஆடியோ மூலமாக  போலீசாரை மிரட்டி வந்த ரவுடி புல்லெட் நாகராஜ் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். தென்கரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற புல்லெட் நாகராஜ்ஜை விரட்டிச்சென்று பெரியகுளம் டி.எஸ்.பி ஆறுமுகம் கைது செய்தார். 

Next Story