5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்..! பொதுமக்கள் வரவேற்பு


5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்..!  பொதுமக்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 10 Sep 2018 2:09 PM GMT (Updated: 10 Sep 2018 2:09 PM GMT)

கிருஷ்ணகிரியில் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சென்னை,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.  இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என பா.ஜனதா கூறியது. 

இந்தநிலையில்,  இதற்கிடையே ராஜஸ்தான் மாநில பா.ஜனதா அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் மீதான வாட்வரியை குறைத்தது, இதனால் அங்கு ரூ. 2.5 குறைந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா 2 ரூபாய் குறைக்கப்படுகிறது, இது நாளை முதல் அமலுக்கு வரும் என அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 

இந்தநிலையில்,  வாடிக்கையாளர் பயன்பெறும் வகையிலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கபடுத்தும் வகையிலும் எச்.பி. எண்ணெய் நிறுவனம் புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலியை செல்போனில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால், அந்த வாடிக்கையாளருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் விலைக்கான பணம் செயலிக்கு அனுப்பப்படும். அந்த தொகை மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை மறுபடியும் பெறலாம். இந்த சேவை இரண்டு மாதங்களுக்கு மட்டும் செயல்படுத்தப்படும் எனவும் எண்ணெய் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 இதனையடுத்து கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள எச்.பி. ஐதர் பெட்ரோல் நிலையத்தில் உரிமையாளர் அமீன் தலைமையில்  புதிய செயலி அறிமுக விழா நடைப்பெற்றது.  

டிஜிட்டல் பரிவர்த்தணையை ஊக்குவிக்க எச்.பி எண்ணெய் நிறுவனம் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளதாக அமீன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் கலந்துகொண்டு புதிய செயலியை அறிமுகம் செய்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான வாடிக்கையாளர் புதிய செயலியை பதிவேற்றம் செய்தனர். 

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story