பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின
x
தினத்தந்தி 11 Sep 2018 12:15 AM GMT (Updated: 10 Sep 2018 8:41 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.

சென்னை, 

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகிவிடும் என்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதைக் கட்டுப்படுத்தக்கோரியும் நேற்று நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. நாடு முழுவதும் 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அதேபோல், சில வணிக அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியிருந்தது. ஆனால், ஆளும் கட்சியான அ.தி.மு.க. மட்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் தமிழ்நாட்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பஸ், ரெயில், வேன், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. அரசு - தனியார் அலுவலகங்களும், பள்ளி - கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கின. கடைகளும் அதிக அளவில் திறந்து இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை, காலை முதலே வழக்கம்போல் பரபரப்பாக இயங்கியது. பஸ், ரெயில், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஒரு சில பகுதிகளில் மட்டும் குறைந்த அளவிலான கடைகள் மூடப்பட்டிருந்தன. வணிகப் பகுதிகளான தியாகராயநகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டையில் கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் இயங்கியது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ஒரு சில பகுதிகளில் கடைகளை அடைக்கச் சொல்லி வியா பாரிகளை வற்புறுத்தினர். ஆனாலும், வியாபாரிகள் கடைகளை அடைக்க வில்லை. சென்னையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை உள்ளிட்ட சில இடங்களில் சாலை மறியலிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அந்த வகையில், சென்னையில் 430 பேரும், காஞ்சீபுரத்தில் 550 பேரும், திருவள்ளூரில் 400 பேரும் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவு இல்லை என்ற போதிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு அலைகள் இருந்ததையும் காண முடிந்தது.

Next Story