விநாயகர் சிலை வைக்க கட்டுப்பாடு: தமிழக அரசுக்கு டாக்டர் தமிழிசை கண்டனம்


விநாயகர் சிலை வைக்க கட்டுப்பாடு: தமிழக அரசுக்கு டாக்டர் தமிழிசை கண்டனம்
x
தினத்தந்தி 11 Sep 2018 8:15 PM GMT (Updated: 11 Sep 2018 7:29 PM GMT)

தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க கட்டுப்பாடு விதித்திருப்பதற்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள சகோதரர்கள் அனைவரும் விநாயகர் சிலைகளை நிறுவி சமூக விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இது ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதி மக்களின் விழாவாக மாறி அந்த விழாக்களில் அப்பகுதி மக்கள் அங்கு நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்வது, கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, சேவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பூஜை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என மக்கள் விழாவாகவே மாறிவருகிறது.

ஆனால், தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் சிலைகளை வைக்கவே முடியாது என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டே இந்துமத நடவடிக்கைகளை முடக்குவதே இன்றைய ஆட்சியாளர்களின் கவனமாக இருப்பது கண்டனத்துக்குரியது. முதல்-அமைச்சர் உடனே தலையிட்டு தேவையற்றக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story