முதல்வர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை 17ம் தேதி விரிவான அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு


முதல்வர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை 17ம் தேதி விரிவான அறிக்கை தர  ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 12 Sep 2018 7:18 AM GMT (Updated: 12 Sep 2018 7:18 AM GMT)

முதல்வர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை 17ம் தேதி விரிவான விசாரணை அறிக்கை தர சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நிலுவையில் உள்ள இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி, ஐகோர்ட்டில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

எனது புகார் மீது கடந்த 22.6.2018 அன்றே முதற்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடங்கிவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, வரைவு அறிக்கை கடந்த 28.8.2018 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் தான் ஊழல் கண்காணிப்புத்துறை செயல்படுகிறது.

எனவே, முதல்-அமைச்சருக்கு எதிரான புகார் தொடர்பாக அவரது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரித்தால் நியாயம் கிடைக்காது.

எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகாரை எந்தவித குறுக்கீடும் இல்லாமல் செயல்படும் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த விசாரணையை ஐகோர்ட்டு நேரடியாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை 17ம் தேதி விரிவான விசாரணை அறிக்கை தர வேண்டும் என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

Next Story