தமிழக மக்கள் விரும்பாத இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்- டிடிவி தினகரன் உறுதி


தமிழக மக்கள் விரும்பாத இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்- டிடிவி தினகரன் உறுதி
x
தினத்தந்தி 12 Sep 2018 10:18 AM GMT (Updated: 12 Sep 2018 10:18 AM GMT)

தமிழக மக்கள் விரும்பாத இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என மதுரையில் டிடிவி தினகரன் கூறினார். #TTVDinakaran

மதுரை

தமிழக அரசியல் அடுத்த கட்ட நகர்விற்கு தயாராகிவிட்டது. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது.

முதல் ஆளாக, திருப்பரங்குன்றத்திலும், திருவாரூரில் நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார் டிடிவி தினகரன். இந்த நிலையில் மதுரை சென்ற அமமுக கட்சியினர் நிறுவனர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் துரோக ஆட்சி நடத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் விரும்பாத இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தேவையற்ற திட்டம். மக்கள் விரும்பாத திட்டம். மலைகள், நீராதாரங்கள், இயற்கை வளங்களை அழித்து 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?

தமிழகத்தில் எத்தனையோ சாலைகள் போக்குவரத்து நெருக்கடியில் உள்ளன. அவற்றை சரி செய்யாமல் இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று தெரியவில்லை.

இப்போது அந்த திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்ற உள்ளதாக தெரிகிறது. அதுவும் கண்டிப்பாக நிறைவேறாது.

ஒரு நோயாளி தனது இறுதிக்கட்டத்தில் நோய் முற்றி எப்படி இறப்பாரோ அது போல இந்த ஆட்சியும் நோயாளியின் இறுதிக் கட்டத்தை போல உள்ளது. இது விரைவில் முடிவுக்கு வரும்.

கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுக்க சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.

முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஒரு ஆண்டாக போராடி வருகிறார்கள். அதற்கும் விரைவில் தீர்வு ஏற்படும்.

எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கும் அரசாகவே எடப்பாடி-பன்னீர் செல்வம் அரசு செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை.

இந்த துரோக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் நடைபெற உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வேட்பாளர்களை நிறுத்தும்.

எங்கள் வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அமோக வெற்றி பெறுவோம். 2 தொகுதிகளிலும் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. 2-வது இடத்திற்கு தான் மற்றவர்கள் போட்டியிட வேண்டும். இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

கடந்த 3 மாதங்களாக இந்த தொகுதிகளில் எங்கள் நிர்வாகிகள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதுவும் தேர்தல் பணி தான். 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது லட்சியங்களை நிறைவேற்றுவதில் நாங்கள் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம்.

குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர்கள், மடியில் கனம் இல்லையென்றால் வழக்கை பயமில்லாமல் எதிர்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

Next Story