உலகத்தரம் வாய்ந்த டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


உலகத்தரம் வாய்ந்த டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 12 Sep 2018 11:30 PM GMT (Updated: 12 Sep 2018 7:55 PM GMT)

சென்னை குரோம்பேட்டையில் உலகத்தரம் வாய்ந்த டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, 

சென்னை குரோம்பேட்டை ஒர்க்ஸ் சாலையில் 36 ஏக்கர் பரப்பளவில் டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையம் கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் இந்த மருத்துவ மையத்தின் நிறுவனராகவும், மகள் டாக்டர் ஜெ.ஸ்ரீநிஷா நிர்வாக தலைவராகவும் உள்ளார். மருத்துவ மையத்தின் தலைவராகவும், மேலாண்மை இயக்குனராகவும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் கின்னஸ் சாதனை படைத்த டாக்டர் ரேலா இருக்கிறார்.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தின் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின்னர், கட்டிடத்தின் உள்ளே குத்துவிளக்கேற்றினார்.

அப்போது டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தின் நிறுவனரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.ஜெகத்ரட்சகன், அவருடைய மனைவி அனுசுயா, மகன் சந்தீப் ஆனந்த்(பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்), மகள் டாக்டர் ஸ்ரீநிஷா, மருமகன் இளமாறன், டாக்டர் ரேலா உள்பட பலர் உடன் இருந்தனர்.

திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், அமைச்சர் எம்.சி.சம்பத், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், அப்பல்லோ மருத்துவமனை குழு தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தில் 450 படுக்கை வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர். அறுவை சிகிச்சை செய்வதற்கு உயர்தரத்தில் 14 அரங்குகளும், டயாலிசிஸ் செய்வதற்கு சமீபத்திய தொழில்நுட்பத்திலான 40 எந்திரங்களும் இருக்கின்றன.

மேலும், வெளிநோயாளிகள் டாக்டர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவதற்கு 75 அறைகள், பரிசோதனை கூடங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. உலகத்திலேயே மிகப்பெரிய கல்லீரல் தீவிர சிகிச்சை பிரிவு இந்த மருத்துவ மையத்தில் உள்ளது.

தொடக்க நிலையில் இருந்து உடல்நிலை மேம்பட உயர்தரத்திலான சிறப்பு கவனம் செலுத்துதல், நவீன ஆம்புலன்ஸ் சேவை போன்ற அனைத்து மருத்துவ சேவைகளையும் நோயாளிகளுக்கு அளிக்க உள்ளனர். மருத்துவ மையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து மருத்துவ மையத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான டாக்டர் ரேலா கூறியதாவது:-

மிகவும் உடல்நிலை மோசமான நிலையில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவதற்கு தேவையான மருத்துவ சேவைகள் இங்கு இருக்கிறது. காப்பாற்றுவது கடினம் என்று சொல்லும் நோயாளிகளையும் குணப்படுத்துவதற்கு தேவையான அதிநவீன மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கிய உயர்ரக தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது. மேலும் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என அனைத்து வகையான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதியும் உள்ளது.

எங்கள் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் சர்வதேச அளவில் இருக்கும். இதனால் சார்க் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

உயர்தரத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதி இருப்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ளவர்களின் மருத்துவ தேவையை கருத்தில்கொண்டே ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டுள்ளது.

உயர்தர சிகிச்சை வழங்குகிறோம். ஆனால் அதே சமயத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்போம் என்று நாங்கள் சொல்லவில்லை. மருத்துவ மையத்துக்கு அருகில் 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. சுற்றளவில் உள்ள உள்ளூர்வாசிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியாக கவனம் செலுத்த உள்ளோம். அவர்களிடம் ஆதார் அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றிதழ் இருந்தால் உயர்மதிப்பு கொடுத்து சர்வதேச அளவிலான சிகிச்சை மிகவும் குறைவான விலையில் அளிக்கப்படும்.

தெற்கு ஆசியாவிலே இதுபோன்ற நவீன வசதிகள் உடைய ஆஸ்பத்திரி இல்லை என்று நான் கருதுகிறேன். அனைத்து வகையான சிகிச்சைகளும் எங்கள் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும். புற்றுநோய்க்கு உயர்தரமான சிகிச்சை எங்களிடம் இருக்கிறது.

‘ரேடியாலஜி’, எம்.ஆர்.ஐ., நவீன வசதியுடன் ஸ்கேன் செய்யும் எந்திரங்கள், ‘ரோபாட்டிக்ஸ்’ அறுவை சிகிச்சை செய்வதற்கு அதிநவீன உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருக்கிறது.

ஆஸ்பத்திரியின் நிறுவனர் எஸ்.ஜெகத்ரட்சகன், ‘இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரி கட்டி உங்கள் கையில் ஒப்படைக்கப்போகிறேன். உங்களிடம் எதிர்பார்க்கிறது எல்லாம் தமிழகத்திலும், இந்தியாவிலும் இதுதான் சிறந்த ஆஸ்பத்திரியாக இருக்கவேண்டும். வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறினார். அதற்கான முழு முயற்சியையும் நான் எடுப்பேன்.

லாபத்துக்காக மட்டும் இல்லாமல் சேவையை கருத்தில்கொண்டே இந்த ஆஸ்பத்திரி திறக்கப்பட்டுள்ளது. மருத்துவ சுற்றுலாவுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளது. புது பிரிவு தொடங்கியிருக்கிறோம். அதில் 96 அறைகள் உள்ளன.

வெளியூர்களில் இருந்து வருபவர்கள் அங்கு தங்கலாம். அது ஓட்டலை போன்றே இருக்கும். தீவிர சிகிச்சை பிரிவில் மட்டும் 140 படுக்கைகள் உள்ளன. இதை வைத்துதான் நாங்கள் மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களின் நலனில் அக்கறை செலுத்துகிறோம் என்று கூறுகிறேன். இதையும் சேர்த்து மொத்தம் 450 படுக்கைகள் உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளிலும் என்னுடைய சேவை தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தின் நிர்வாக தலைவர் டாக்டர் ஸ்ரீநிஷா கூறுகையில், ‘சர்வதேச தரத்திலான அனைத்து வசதிகளை கொண்ட, மிகவும் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களால் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக இது இருந்தாலும், சாதாரண ஏழை எளிய மக்கள் வந்து சாதாரண கட்டணத்தில் சிகிச்சை பெறும் வகையில் இருக்கும்’ என்றார்.

மருத்துவ மையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. முதல்நாளிலேயே ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தனர்.

Next Story