மத்தியில் ஆளும் அரசு அபாரமாக நடிக்கிறது அ.தி.மு.க. பத்திரிகை கடும் பாய்ச்சல்


மத்தியில் ஆளும் அரசு அபாரமாக நடிக்கிறது அ.தி.மு.க. பத்திரிகை கடும் பாய்ச்சல்
x
தினத்தந்தி 12 Sep 2018 10:15 PM GMT (Updated: 12 Sep 2018 8:03 PM GMT)

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை உயர்வு மூலம் எல்லா பொருட்களின் விலையும் ஏறுகிறதே என்ற சாமானியனின் கவலை சர்க்காருக்கு புரியவில்லையே என்றும், மத்தியில் ஆளும் அரசு அபாரமாய் நடிக்கிறது என்றும் மத்திய அரசு மீது அ.தி.மு.க. பத்திரிகை கடும் பாய்ச்சலை வெளிப்படுத்தியிருக்கிறது.

சென்னை, 

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை உயர்வு மூலம் எல்லா பொருட்களின் விலையும் ஏறுகிறதே என்ற சாமானியனின் கவலை சர்க்காருக்கு புரியவில்லையே என்றும், மத்தியில் ஆளும் அரசு அபாரமாய் நடிக்கிறது என்றும் மத்திய அரசு மீது அ.தி.மு.க. பத்திரிகை கடும் பாய்ச்சலை வெளிப்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான நமது அம்மாவில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆவேச கூச்சலும், அடி வயிறு எரிச்சலும் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த கட்டுரையில் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் விமர்சனம் செய்து, கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. நமது அம்மா பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கதர் கட்சி ஆண்ட காலத்திலான ஏராள ஊழல்கள் இப்போது இல்லை தான். ஊழல் இல்லை என்கிற அதே வேளையில் மனிதன் நிம்மதியாய் வாழும் சூழலில்லை என்கிற அளவுக்கு பெட்ரோல்-டீசல் விலையேற்றம் பெருங்கவலை தருகிறதே... எரிபொருள் விலை ஏறினால் எல்லா விலையும் ஏறுமே என்கிற சாமானியன் கவலை சர்க்காருக்கு புரியலையே..., சிலிண்டர் விலை ஏற்றம் ஏறத்தாழ ஆயிரத்தை தொடும் நிலையில் நடுத்தர வர்க்கம் நிம்மதி இழக்குதே, நித்திரை துறக்குதே.

ஆவேசம்

அடுப்பெரியும் அதே வேளை சிலிண்டர் விலை கேட்டு அடித்தட்டு மக்களுக்கோ அடி வயிறும் எரியுதே. இதை அறியாதது போல மத்தியில் ஆளும் அரசு அபாரமாய் நடிக்குதே. உலகத்தின் வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டாலரின் அடிப்படையில் என்றிருக்க, இதுவரை காணாத இந்திய பணத்தின் வீழ்ச்சி ஏற்றுமதி செய்வோரை ஏகத்துக்கும் அழிக்குதே. இதனால் ஆட்குறைப்பு வேலை இழப்பு ஏராளமாய் நடக்குதே.

ஒரு புறம், வருமான வரி கடுமை. மறுபுறம், இவ்வுலகில் இல்லாத அளவுக்கு இருபத்தெட்டு சதவீதம் வரை ஜி.எஸ்.டி. வசூலிக்கும் கொடுமை. இந்த வரிவிதிப்பு வதையில் இருந்து, பெட்ரோல்-டீசலுக்கு விலக்கு தரமாட்டோம் என்கிற பிடிவாத நிலைமை, தாமரை ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் போக்கோடு நடத்துகிற சிறுமை, அத்தனையும் சேர்ந்துதான் ஆவேசம் கொள்ளச் செய்யுதோ ஆகாய விமானத்திலும் குழாயடிச் சண்டைக்கு அடிப்படை ஆகுதோ.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கிறதா?

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. அதிகம் நெருக்கம் காட்டி வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த பல திட்டங்களை அ.தி.மு.க. ஆதரித்தது. துணை ஜனாதிபதி தேர்தலிலும் வாக்குகளை பதிவு செய்தது. இதன் காரணமாக மத்திய பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. ரகசிய கூட்டு வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் கடந்த சில நாட்களாக மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் விமர்சனம் செய்து கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்தநிலையில், அ.தி.மு.க. வின் அதிகாரப்பூர்வ பத்திரிகை நமது அம்மா கட்டுரையிலும் மத்திய அரசு விமர்சிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. உண்மையிலேயே பா.ஜ.க.வை எதிர்க்கிறதா? அல்லது அரசிலுக்காகவா? என்பது குறித்த விவாதம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story