மாநில செய்திகள்

‘ஜெயலலிதா உடல் நிலை குறித்து மத்திய அரசுக்கு எவ்வாறு அறிக்கை அனுப்பப்பட்டது’ முன்னாள் கவர்னரின் செயலாளரிடம் குறுக்கு விசாரணை + "||" + How was the report submitted to the Central Government regarding Jayalalithaa's health condition?

‘ஜெயலலிதா உடல் நிலை குறித்து மத்திய அரசுக்கு எவ்வாறு அறிக்கை அனுப்பப்பட்டது’ முன்னாள் கவர்னரின் செயலாளரிடம் குறுக்கு விசாரணை

‘ஜெயலலிதா உடல் நிலை குறித்து மத்திய அரசுக்கு எவ்வாறு அறிக்கை அனுப்பப்பட்டது’ முன்னாள் கவர்னரின் செயலாளரிடம் குறுக்கு விசாரணை
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மத்திய அரசுக்கு எவ்வாறு அறிக்கை அனுப்பப்பட்டது? என்று விசாரணை ஆணையம், முன்னாள் கவர்னரின் முதன்மை செயலாளரிடம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை, 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சை அளித்த மருத்துவர் ராஜ் பிரசன்னா மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் விக்னேஷ் ஆகியோர் நேற்று காலை 10.15 மணிக்கு ஆஜரானார்கள்.

அவர்களிடம் தொடர்ந்து பகல் 12.15 மணி வரை 2 மணி நேரம் ஆணையத்தின் வக்கீல்கள் மருத்துவர்களிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.

பின்னர் ஆணையத்தில் நடந்த விசாரணை குறித்து வக்கீல்கள் கூறியதாவது:-

ஆணையத்தில் மருத்துவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவின் கை, கால் அசைவுக்காக 59 நாட்களில் 120 முறை பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. நல்ல ஒத்துழைப்பு அளித்தார். ஒரு நாள் ஆக்சிஜன் குழாய்கள் பொருத்தப்படாமல் சக்கர நாற்காலியில் இருந்தார். இவ்வாறு அவர்கள் பதில் அளித்ததாக வக்கீல்கள் கூறினார்கள்.

இதுகுறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:-

ஆணையத்தில் ஆஜரான முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆணைய வக்கீல்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.

ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மத்திய அரசுக்கு எதன் அடிப்படையில் அறிக்கை அனுப்பப்பட்டது. 2016-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதியே அபாயகரமான நிலையில் இருந்த ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதற்கான முயற்சியை கவர்னர் மேற்கொள்ளாது ஏன்? என முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளரிடம் சரமாரியான கேள்வியை எழுப்பியுள்ளது.

2011-ம் ஆண்டு சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு தனியாக ஜெயலலிதா இருந்தார். பின்பு சசிகலாவை ஜெயலலிதா தன்னுடன் இருக்க அழைத்துக்கொண்டார். இந்த சூழலில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந்தேதி மிகவும் அபாயகரமான நிலையில் இருந்துள்ளார். அக்டோபர் 1-ந்தேதி லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மருத்துவ அறிக்கையில் 40 சதவீதமே உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அதை கவர்னர் பார்த்த பின்பும் ஏன் வெளிநாட்டுக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை.

அவருடன் இருந்தவரும் எந்த முடிவும் எடுக்கவில்லையா? என செயலாளர் ரமேஷ் சந்த மீனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா உடல் நிலை குறித்து இரண்டு பொதுநல வழக்கு போடப்பட்டு இருந்தது. அப்போது வெளியான மருத்துவ அறிக்கைகளுக்கும் உண்மையாக ஜெயலலிதாவிற்கு இருந்த உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையில் பல வித்தியாசம் இருந்துள்ளது. மருத்துவ அறிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பவில்லையா? ஏன் கவர்னர் கேள்வி கேட்க முயற்சிகள் எடுக்கவில்லை? என ஆணையம் அடுக்கடுக்கான கேள்வியை கேட்டுள்ளது.

நவம்பர், டிசம்பரில் இரண்டு அப்பல்லோ நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்றார். அப்போதும் அப்பல்லோ மருத்துவர்களிடம் ஜெயலலிதா உடல் நிலை குறித்து கேட்டார். சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எதுவும் கேட்காமல் மத்திய அரசுக்கு எவ்வாறான அறிக்கை அனுப்பப்பட்டது என எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

2016-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி அபாயகரமான நிலையில் ஜெயலலிதா இருந்த நிலையில் ஏன் இலாகா அக்டோபர் 10-ந்தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் எதிர்கட்சிகள் நிர்வாகத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுப்பெற்ற நிலையில் தான் இலாகா மாற்றம் நடைபெற்றதா? என முன்னாள் கவர்னரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆனால் முறையான பதில் இல்லாததால் முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவை விசாரிக்க வேண்டிய நிலை ஆணையத்துக்கு ஏற்பட்டு உள்ளது. கவர்னரை விசாரிப்பதில் சட்ட சிக்கல்கள் இருப்பதால் அது குறித்து ஆணையம் ஆலோசித்து வருகிறது.

இவ்வாறு ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.