அரசியலில் 50 ஆண்டுகளை தொட்ட வைகோ தொண்டர்களுக்கு அழைப்பு


அரசியலில் 50 ஆண்டுகளை தொட்ட வைகோ தொண்டர்களுக்கு அழைப்பு
x
தினத்தந்தி 12 Sep 2018 8:18 PM GMT (Updated: 12 Sep 2018 8:18 PM GMT)

ஈரோட்டில் 15-ந் தேதி நடைபெறும் ம.தி.மு.க. வெள்ளி விழா, பெரியார்-அண்ணா பிறந்தநாள், அரசியலில் 50 ஆண்டுகள் ஆகிய முப்பெரும் விழாவில் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை, 

ஈரோட்டில் 15-ந் தேதி நடைபெறும் ம.தி.மு.க. வெள்ளி விழா, பெரியார்-அண்ணா பிறந்தநாள், அரசியலில் 50 ஆண்டுகள் ஆகிய முப்பெரும் விழாவில் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திராவிட இயக்கத்தின் தொட்டில் பூமியாம் ஈரோடு கலைஞர் நகரில் 15-ந் தேதி ம.தி.மு.க. முப்பெரும் விழா மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, ம.தி.மு.க. வெள்ளி விழா, பொதுவாழ்வில் (அரசியலில்) நான் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகிய முப்பெரும் விழாக்களும் இணைந்து மாநில மாநாடாக பேரெழுச்சியுடன் நடத்திட ம.தி.மு.க. உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

நூற்றாண்டைக் கடந்திருக்கின்ற திராவிட இயக்கத்தின் மீது சிலர் வன்மத்தை வாரி வீசி வரும் காலகட்டத்தில், திராவிட இயக்க லட்சியக் கோட்பாடுகள் நீர்த்துப் போய்விடவில்லை என்பதை புரிய வைக்கப் போகும் மாநாடு தான் ஈரோட்டில் நடக்கிறது. இந்துத்துவா கோட்பாடு, நுழைய முடியாத திராவிட கோட்டையாகத் திகழும் தமிழ்நாட்டில், காவிக் கொடியை ஏற்றத்துடிக்கிறார்கள். தமிழகத்தின் உயிராதாரமான பிரச்சினைகளில் துரோகம் இழைத்து வரும் பா.ஜ.க. அரசுக்கு அடிமை சேவகம் செய்யும் அ.தி.மு.க. அரசும் துணை போகிறது.

இந்தச் சூழலில் திராவிட இயக்கத்திற்கு அரண் அமைக்கப் போகிற ம.தி.மு.க. முப்பெரும் விழா மாநில மாநாட்டுக்கு அனைவரும் திரண்டு வர வேண்டும். நாடு போற்றும் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் தமிழகத்தின் அரசியல் திசைவழியைத் தீர்மானிக்க வாரீர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story