தமிழகத்தில் மத்திய, தென்மாவட்டங்களில் மின்தடை பொதுமக்கள் அவதி


தமிழகத்தில் மத்திய, தென்மாவட்டங்களில் மின்தடை பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 12 Sep 2018 10:00 PM GMT (Updated: 12 Sep 2018 8:21 PM GMT)

காற்றாலை, மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் தமிழகத்தில் மத்திய மற்றும் தென்மாவட்டங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரம் கடந்த 2 நாட்களாக குறைந்ததாலும், மத்திய தொகுப்பில் இருந்து 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வராததாலும் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டது. வடசென்னை அனல் மின்நிலையத்திலும் பழுது ஏற்பட்டதால் மின்சார உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதேபோன்று மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கடந்த 8-ந்தேதி பழுது ஏற்பட்டதால் அங்கு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. பொதுவாக கோடைகாலத்தில் தான் மின்தடை ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது கோடை காலம் இல்லாத நேரத்திலும் மின்தடை ஏற்படுவதால் அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக தினசரி 14 ஆயிரத்து 200 மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் இந்த காரணங்களால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் சுமார் 1,410 முதல் 2,500 மெகாவாட் வரை தட்டுப்பாடு ஏற்படுவதால் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக மத்திய மற்றும் தென்மாவட்டங்களில் சராசரியாக 2 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக மின்தடை ஏற்பட்டதால் அதிகாரிகளால் உடனடியாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை.

மின்தடைக்கு நிலக்கரி தட்டுப்பாடும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்திற்கு மேற்குவங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து ஆண்டுக்கு 26 மில்லியன் டன் நிலக்கரி வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அங்கு மழை வெள்ளம் போன்ற காரணங்களால் நிலக்கரி கிடைப்பதிலும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததால் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்பாராதவிதமாக மின்சாரம் தடைபடுவதால் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. பொதுமக்கள் கொடுத்த புகார்களின் பேரில் மின்வெட்டை சரி செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு, அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

Next Story