நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்பவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்பவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Sep 2018 9:45 PM GMT (Updated: 12 Sep 2018 8:34 PM GMT)

தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்பவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை பொன்னேரி அருகே உள்ள வல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

வல்லூர் பகுதியில் உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிக திறன் கொண்ட மின் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்கின்றனர். இதனால், வல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது.

இதேபோன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சினை ஏற்படு கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலமாக விற்பனை செய்வதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது திருவள்ளூர் கலெக்டர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘வல்லூர் கிராமத்தில் நிலத்தடி நீரை முறைகேடாக எடுக்க பயன்படுத்திய அதிக திறன் கொண்ட மின்மோட்டார்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதைப்பார்த்த நீதிபதிகள், ‘சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் குற்றவியல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்துச்செல்லும் லாரிகளை பறிமுதல் செய்யும் அதிகாரம் மட்டும் தான் தாசில்தார்களுக்கு உள்ளது. குற்றவியல் நடவடிக்கை எடுக்க உதவி கலெக்டருக்கு தான் அதிகாரம் உள்ளது’ என்றார்.

அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல், ‘நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுபோன்று தண்ணீர் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது’ என்று குற்றம்சாட்டினர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்து திருவள்ளூர் கலெக்டர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், ‘தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலமாக விற்பனை செய்பவர்கள் மீது எத்தனை குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழக அரசு வருகிற 24-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story